கோலாலம்பூர் : நாட்டில் பல துறைகளில் பணியாற்றும் தன்னார்வலத் தொண்டர்களுக்கு ஊழியர் பாதுகாப்பு சேமநிதியான சொக்சோ மூலம் பாதுகாப்பு அளிக்கும் புதியத் திட்டத்தை மனித வள அமைச்சர் தொடக்கி வைத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி சரவணன் தொடக்கி வைத்த இந்த நிகழ்ச்சியின் வழி சொக்சோ திட்டத்தில் மலேசிய ஆயுதப் படைகள், அரச மலேசியக் காவல் துறை, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, மலேசிய பொது (சிவில்) பாதுகாப்புப் படை, மலேசிய தன்னார்வத் துறை (ரேலா), இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலத் துறை ஆகிய 7 அரசு நிறுவனங்கள் இணைந்துள்ளன.
அந்தத் தன்னார்வலத் தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களுக்குப் விபத்து ஏற்பட்டால், அதற்குரிய பாதுகாப்பை இந்தத் திட்டம் வழங்கும்.
அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்தியிருக்கிறது என்றும் சரவணன் தெரிவித்தார்.