புத்ரா ஜெயா : மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படாது என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார். மரண தண்டனை தொடரும் என்றும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார். மேலும் நீதிபதிகளுக்கு இப்போது தண்டனை வழங்குவதில் விருப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம், சட்டம் விவகாரங்கள்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் முன்னர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
கட்டாய மரண தண்டனையை நீக்குவதற்கும் அதற்கு பதிலாக நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்ட வேறு தண்டனைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த முடிவுடன், “கட்டாய” என்ற பகுதி நீக்கப்படும் என்றும் நீதிபதிகள் இந்த வார்த்தைக்கு இனிக் கட்டுப்பட மாட்டார்கள் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைத் தவிர நீதிபதிகளுக்கு வேறு வாய்ப்பில்லை என்ற நிலைமை இருந்து வந்தது.
“எல்லோரும் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். குற்றவாளி நூறாயிரக்கணக்கான மக்கள் (போதைப்பொருள் காரணமாக) இறக்கும் அளவிற்கு கடுமையான போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கண்டறியப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், நீதிபதி, தனது விருப்பப்படி, குற்றவாளிக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருதினால், அவருக்கு பிரம்படியுடன் ஆயுள் தண்டனை விதிக்க முடிவு செய்தால், அவர் கட்டாய மரண தண்டனையை அந்த ஆயுள் தண்டனைக்காக மாற்றலாம்” என்றும் அவர் கூறினார்.
இன்று பகாங்கில் உள்ள பெராவில், தீபகற்ப மலேசியா பூர்வ குடியினர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.