Home நாடு டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் –  அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு ...

டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் –  அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு – ஒருங்கிணைந்த மகத்தான தலைவர்

749
0
SHARE
Ad
அமரர் டத்தோ கு.பத்மநாபன்

(ம.இ.கா.வின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ கு. பத்மநாபன்  10 ஜூன் 1937ஆம் நாள் பிறந்தவர். 9 ஜூன் 2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது வயதில்  காலமானார். அவரின் சேவைகளையும் பங்களிப்பையும் நினைவுகூர்கிறார் இரா. முத்தரசன்)

1974ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் அரசியல் பார்வையாளர்களால் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கப்பட்ட பொதுத் தேர்தலாகும். துங்கு அப்துல் ரஹ்மானிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட துன் அப்துல் ரசாக் சந்தித்த முதல் பொதுத் தேர்தல் அது!

துன் ரசாக் புதிதாக உருமாற்றிக் கட்டமைத்த பாரிசான் நேஷனல் என்னும் தேசிய முன்னணிக் கூட்டணி சந்தித்த முதல் தேர்தல் என்பதால், மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயப்பாடுகள் எங்கும் நிலவின.

1973ஆம் ஆண்டில் துன் சம்பந்தனிடமிருந்து ம.இ.கா. தேசியத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் அதுதான்.

#TamilSchoolmychoice

ம.இ.கா.வுக்கு அந்தப் பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ம.இ.காவின் பாரம்பரியத் தொகுதியான  கிள்ளான்  துறைமுகத் தொகுதியில் மாணிக்கவாசகம் போட்டியிட்டார்.

துன் சம்பந்தனின் இறுதிச் சடங்கின்போது தோபுவான் உமா சம்பந்தனுக்கு ஆறுதல் கூறும் மாணிக்கா – அருகில் டத்தோ பத்மா

சுங்கை சிப்புட் தொகுதியில்  (துன்) ச. சாமிவேலு வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். நெகிரி செம்பிலானிலுள்ள  தெலுக் கெமாங் தொகுதியில் (டத்தோ) கு. பத்மநாபனும் கோலாலம்பூரிலுள்ள டாமன்சாரா தொகுதியில் (டான்ஸ்ரீ) சி. சுப்ரமணியமும் வேட்பாளர்களாக  அறிவிக்கப்பட்டனர். இருவருமே புதுமுகங்கள்.

அப்போது பத்மநாபனின் பின்னணி குறித்து  ம.இ.கா.வினருக்கு அதிகமாக தெரிந்திருக்கவில்லை. அவரின் வேட்பாளர்  நியமனமும் சில சலசலப்புகளையும் எதிர்ப்புகளையும்  சந்தித்தது.

கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காமல்  புதியவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை மாணிக்கவாசகம் வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

ஆனால், காலவோட்டத்தில்  ம.இ.கா.வின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சிக்கும் சமுதாயத்திற்கும் அளவிட முடியாத சேவைகளையும்  பங்களிப்பையும் வழங்கியத் தலைவர்களில் ஒருவராகவும்  ‘பத்மா’ என அன்புடன் அழைக்கப்பட்ட பத்மநாபன் உயர்ந்தார்.

பத்மாவின் வாழ்க்கைப் பின்னணி

ஆதி.குமணனுடன் டத்தோ பத்மா

அரசியலுக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே பத்மா இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மிகச் சரியான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கு அவருக்கென  ஒரு பின்னணி இருந்தது.

அந்தப் பின்னணி என்ன என்பது அவர் அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னர்தான், கட்சியினருக்கும் புரிந்தது. அவரின் மதிப்பும் அதன் காரணமாக  உயர்ந்தது.

மிகச் சாதாரண, பின்தங்கிய குடும்பத்திலிருந்து  வந்தவர் பத்மநாபன். நெகிரி செம்பிலான், லிங்கி வட்டாரத்திலுள்ள புக்கிட் பெர்த்தாம் தோட்டத்தில் பிறந்தவர்.

அவரது தந்தையார் திரு.குஞ்சம்பு பத்மாவை, தமிழ்ப்பள்ளிக்கே ஆரம்பக் கல்விக்காக  அனுப்பினார். மலையாள வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் பத்மாவுக்கு  தமிழ்மொழி மீது  இருந்த ஆழமான  அறிவும் பற்றும்  அவருடன் நெருங்கியப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அதற்குக் காரணம் அவர் பெற்ற தமிழ்ப் பள்ளிக் கல்வி. அதன் காரணமாக, பிற்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தபோது, தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளையும் அவரால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழ்ப்பள்ளியில் படித்த காரணத்தினால் பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில்  பட்டப் படிப்புக்குச் சென்றபோது, தமிழ்மொழியையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தார் அவர்.

இரா.பாலகிருஷ்ணன்

மலாயா பல்கலைக்கழகத்தில்  முதன் முதலாக இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தொடக்க ஆண்டிலேயே, அந்த துறையில் சேர்ந்து படித்தவர் பத்மநாபன். அப்போது அவருடன் அதே இந்திய ஆய்வியல் துறையில் ஒன்றாகப் படித்தவர் இரா. பாலகிருஷ்ணன். பின்னாளில் மலேசிய தமிழ் வானொலிப் பிரிவின் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் பாலகிருஷ்ணன்.

தமிழ்ப்பள்ளியில் படித்ததாலும்  பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகப் படித்ததாலும் பத்மாவுக்கு  தமிழ்மொழியில் ஆழமான  இலக்கண – இலக்கிய அறிவு இயல்பாகவே அமைந்திருந்தது.

இந்தப் பின்னணிகள் காரணமாக, இந்திய சமுதாயத்தின் உண்மையான நிலவரத்தை எளிதாகப் புரிந்து கொள்ளவும் அவரால் முடிந்தது. தோட்டப்புற வாழ்க்கை – தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வி  – போன்ற பின்னணி அவரைச் சிறந்த தலைவராகச் செதுக்கிய அம்சங்கள் என்று கூறலாம்.

1959ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்த பத்மா, அரசாங்கத் துறையில் சேர்ந்தார். அரசாங்க உபகாரச் சம்பளத்தின் மூலம் அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொழிலாளர் அமைச்சிலும் பின்னர் பிரதமர் இலாகாவின் பொருளாதார திட்டமிடல் பிரிவிலும் 1974ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் போட்டியிடும்வரை பணியாற்றினார்.

அந்த காலகட்டத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக்குடனும் தொழிலாளர் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகத்துடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார் பத்மா.

பத்மாவின் திறமைகளை அறிந்து கொண்ட துன் ரசாக் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ம.இ.கா.வில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாணிக்காவிடம் வற்புறுத்தினார்.

மாணிக்காவுக்கும் பத்மாவின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

பத்மாவின் மஇகா பிரவேசம்

1973ஆம் ஆண்டில் மாணிக்கவாசகம் தேசியத் தலைவரானதும்  இந்திய சமுதாயத்தின் எதிர்காலப் பொருளாதாரம் குறித்து  சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். அந்தக் கருத்தரங்கை முன்னின்று ஏற்பாடு செய்தவர் பத்மநாபன்.

அந்த கருத்தரங்கில் இந்தியர்களின் எதிர்காலப் பொருளாதார இலக்குகளும் பாதைகளும்  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கி ‘இந்தியன் புளுபிரிண்ட்’ என்ற வழிகாட்டி நூலை பத்மநாபன் சமர்ப்பித்தார்.

பிற்காலத்தில்  மாணிக்காவின் தலைமைத்துவத்தில் கட்சி எடுத்த பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மூலாதாரம் இந்தியன் புளுபிரிண்ட் என்ற அந்த வழிகாட்டி நூல்தான்.

நேசா கூட்டுறவுக் கழகம், ம.இ.கா. யூனிட் டிரஸ்ட், தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரி வழியாகக் கல்விப் பணிகள் ஆகியவை அந்தத் திட்டத்தின்  ஒரு பகுதியாகும்.

ஆனால், அந்தத் திட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி முழுமை அடைவதற்கு முன்பே மாணிக்கவாசகம் 1979இல் காலமானார். இருந்தாலும் பத்மாவின் அரசியல் பணி கட்சியிலும், சாமிவேலு தலைமைத்துவத்திலும் இனிதே தொடர்ந்தது.

பத்மாவின் அரசியல் விசுவாசம்

1974ஆம் ஆண்டில் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினராக மஇகா-தேசிய முன்னணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மா, 1990 வரை அந்தத் தொகுதியைச் சிறப்பாக  தற்காத்தார்.

இடைப்பட்ட காலத்தில் 1976ஆம் ஆண்டில் அவர் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்த டன்ஸ்ரீ  மாணிக்கவாசகத்திற்கு அவரின் மறைவு வரை தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் பத்மா திகழ்ந்தார்.

1979ஆம் ஆண்டில் மாணிக்கவாசகத்தின் மறைவுக்குப் பின்னர், சாமிவேலு இடைக்காலத் தேசியத் தலைவரானார்.

அப்போது  சாமிவேலுவுக்கும் சுப்ராவுக்கும் இடையில் எழுந்த அரசியல் போராட்டத்தில்  தன் உற்ற நண்பரான சுப்ராவுக்கு ஆதரவாக தோள் கொடுத்து நின்றார் பத்மா.

எத்தனையோ போராட்டங்கள் அதன் பின்னர் தொடர்ந்தாலும் இறுதிவரை சுப்ராவுக்கு பக்க பலமாக பத்மா திகழ்ந்தார். எந்த இடத்திலும் சுப்ராவை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை.

அதேபோல, சுப்ராவும் தன்னை விட பத்து வயது மூத்தவர் பத்மா என்றாலும் தனக்கு அடுத்த தளபதி என்ற நிலையில் அவருக்கு எல்லா வகையிலும் உரிய மரியாதை கொடுத்து மதிப்பளித்து வந்தார்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் அதை அவர்கள் தனியாக அமர்ந்து  பேசித் தீர்த்துக் கொள்ளும் முதிர்ச்சியும் நட்பும் அவர்களுக்கிடையே இறுதிவரை தொடர்ந்தது.

உதவித் தலைவராக 4 தவணைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மா

1979 ம.இ.கா. தேர்தலில்  சுப்ரா– பத்மா இருவருமே  மூன்று உதவித் தலைவர்களுக்கான பதவிக்குப் போட்டியிட்டனர்.

சுப்ரா அதிக வாக்குகள் பெற்று  முதலிடத்தையும்  பத்மா இரண்டாவது இடத்தையும் அந்தத் தேர்தலில் பெற்றனர். அடுத்து 1981ஆம் ஆண்டில் (அப்போதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ம.இ.கா. கட்சி தேர்தல்கள் நடைபெறும்) சுப்ரா தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, முதலாவது உதவித்தலைவராக பத்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில்தான்  பத்மாவுடன் இணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்ட எம்.ஜி. பண்டிதனும் இரண்டாவது உதவித் தலைவராக  வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 1984, 1987 கட்சித் தேர்தல்களிலும் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் பத்மா.

1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவருக்கு தெலுக் கெமாங் தொகுதியில் மீண்டும் போட்டியிட சாமிவேலு வாய்ப்பு அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்தும் அவர் ஒதுங்கிக் கொண்டார்.

இருந்தாலும், சுப்ராவுக்கு உறுதுணையாக நேசா கூட்டுறவுக் கழகத்திலும், டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி அமைப்பிலும் சேவையாற்றினார். அரசாங்கம் தொடர்பான சில ஆலோசனைக் கூட்டங்களுக்கும் அவர் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அமைச்சுகளால் அழைக்கப்பட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர், சில வணிக முயற்சிகளிலும்  சமூக சேவைகளிலும் அவர் ஈடுபட்டார். இன்று நாட்டின் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக திகழும் ‘மணிப்பால்’ மருத்துவக் கல்லூரி மலேசியாவில் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியாக உருவாக்கப்படப் பாடுபட்டவர் பத்மா. சுகாதாரத் துணை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவத்தைத் துணையாகக் கொண்டு மணிப்பால் மருத்துவக் கல்லூரி இங்கு செயல்பட அடித்தளம் அமைத்துத் தந்தவர் பத்மா!

அதைத் தொடர்ந்துதான் நாட்டில் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் பின்னர் நிர்மாணிக்கப்பட்டன.

தொழிலாளர் அமைச்சின் துணை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் நாடு தழுவிய அளவில் பயணங்கள் மேற்கொண்டு  தோட்டங்களுக்கு வருகை அளித்தார். அங்கு நிலவிய இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கண்டார்.

அதேவேளையில்,  அந்தத் தோட்டங்களிலுள்ள  தமிழ்ப்பள்ளிகளின்  பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு கண்டார்.

துணை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அவரது அலுவலகத்தில் தினந்தோறும் கூடிய பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு கண்டார்.

அவரின் சேவைகளும்  இந்திய சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும் இன்றும் அவரின் ஆதரவாளர்களாலும் நண்பர்களாலும் நினைவுகூரப்படுகின்றன.

2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது  பிறந்த நாளைக் கொண்டாட ஒரே ஒரு நாள் எஞ்சியிருந்த நிலையில்  ஜூன் 9ஆம் தேதி உடல் நலக் குறைவால் பத்மா காலமானார்.­­­

-இரா.முத்தரசன்