Home நாடு ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை

ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை

834
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : மாநில உரிமைகளை மத்திய அரசாங்கம் மதிக்காவிட்டால் ஜோகூர் மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று எச்சரிக்கை விடுத்தார்.

1948 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட மலாயா கூட்டமைப்பு உடன்படிக்கையை மத்திய அரசு மதிக்க வேண்டும் – விருப்பப்படி அதை மீறக்கூடாது என்றும் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மாநில உரிமைகளை தொடர்ந்து மதிக்காவிட்டால், புறக்கணித்தால், மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தம் மீறப்பட்டதாகி விடும். அதைத் தொடர்ந்து ஜோகூர்
மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என்றும் ஜோகூர் சுல்தான் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

மத்திய அரசின் சில நடவடிக்கைகள் சில முடிவுகள் மாநில அரசைப் புறக்கணிப்பது போல் தெரிகிறது. அனைத்துத் தரப்புகளும் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்களில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டார்.

“உங்களின் இஷ்டத்திற்கு முடிவுகளை எடுக்காதீர்கள். பத்து பூத்தே தீவு மீதான உரிமைக் கோரல் மீதான மேல்முறையீட்டை இரத்து செய்யும் அரசாங்கத்தின்
முடிவு எனக்கு ஏமாற்றமளிக்கிறது. அந்த முடிவில் ஜோகூர் அரசாங்கத்திடம் ஆலோசனை பெறப்படவில்லை. அந்த முடிவு மாநில நில உரிமையும், ஆட்சி உரிமையும் தொடர்புடைய ஒரு விவகாரமாகும். மாநில அதிகாரங்களை மீறும் தரப்பினர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிபோது ஜோகூர்
சுல்தான் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டார்.

மாநிலத்திலுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள், பொதுநல வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்படாதது குறித்தும், மறுசீரமைப்பு செய்யப்படாதது குறித்தும் சுல்தான் சுட்டிக் காட்டி வருத்தம் தெரிவித்தார். “மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுல்தானா அமினா மருத்துவமனை,
சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, சுல்தான் இஸ்கண்டார் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகம் தடுப்புக் காவல் போன்றவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஜோகூர்பாரு யூடிசி என்னும் நகர்ப்புற உருமாற்ற
மையமும் சேவைகளும் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது” என்றும் ஜோகூர் சுல்தான் சாடினார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஜோகூர் ஏராளமான பங்களிப்பை வழங்கினாலும் ஏதோ மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்தப்படுவதாக சுல்தான் வருத்தம் தெரிவித்தார். ஆண்டுக்கு 13 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை
மத்திய அரசாங்கத்திற்கு ஜோகூர் மாநிலம் வழங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட்ட சுல்தான் “இதே நிலைமை தொடர்ந்தால் ஜோகூர் மக்கள் கொதித்தெழுந்து மலேசியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு முடிவெடுக்கலாம்.
நாம் தனியாக இயங்கினால் நாம் மேலும் மேம்பாடுகளை ஜோகூர் மாநிலத்திற்குக் கொண்டு வர முடியும்” என்றும் தெரிவித்தார்.