Home நாடு “தந்தையரின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்” – விக்னேஸ்வரன்

“தந்தையரின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்” – விக்னேஸ்வரன்

625
0
SHARE
Ad

தந்தையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவரும் தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம் தாயார் என்றால், நமக்கு வழிகாட்டியாய் இருந்து நமக்கான தேவைகளைக் கண்டறிந்து, அதை நிறைவேற்ற வாழ்நாளெல்லாம் அயராது பாடுபடும் இன்னொரு தெய்வம் நமது தந்தையாகும்.

அந்தத் தந்தையருக்கான சிறப்பு தினத்தின் தந்தையர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளின் நலன்களுக்காகவும் கடுமையாக உழைத்த – உழைத்துக் கொண்டிருக்கும் – தந்தையர்களுக்கு எனது பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நம்மீது தந்தையர்கள் அளவிட முடியாத அன்பு செலுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கண்டிப்புடன் நம்மை அவர்கள் வளர்ப்பதற்குக் காரணங்களும் உண்டு. தங்களின் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையும், தன்னை விட தனது பிள்ளைகள் வாழ்வில் பன்மடங்கு முன்னேறி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் தந்தையர் நம்மீது கண்டிப்பைக் காட்டுவதற்கான காரணங்களாகும். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

இன்றைக்கு ஒரு சிலர் தங்களின் தந்தையரை இழந்து அவர்களின் இழப்பை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். வேறு சிலருக்கு தங்களின் தந்தையோடு இந்தத் தந்தையர் தினத்தைக் கொண்டாடும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஏதோ காரணங்களால் தந்தையரை இழந்திருப்பவர்கள் அவர்களின் பங்களிப்பை இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும். அதே வேளையில், தந்தையரை அருகில் வைத்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு பெற்றிருப்பவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறி, தந்தையர்களைத் திருப்திப்படுத்தும் வண்ணமும், மகிழ்ச்சிப்படுத்தும் வண்ணமும் நடந்து கொள்ள வேண்டும். இதை தந்தையர் தினத்தில் மட்டும் செய்யாமல், தங்களின் வாழ்நாள் முழுக்க தங்களின் கடமையாக எண்ணி அவர்கள் தங்களின் பெற்றோர்களை மகிழ்ச்சியோடு வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்டும். அத்துடன் தங்களின் வாழ்நாள் முழுக்க பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டோம் என்ற மன நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.

இந்த தந்தையர் தினத்தில் ஒவ்வொரு தந்தையும் தங்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க உறுதி கொள்ள வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் இந்தத் தருணத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தந்தையரும் இந்த நேரத்தில் தங்களின் பிள்ளைகளின் அடுத்தகட்ட கல்வி என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பதில் தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டுக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கு அடுத்த கட்டக் கல்விப்பாதையைப் பாதையைக் காட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய சமூகத்தின் தந்தையருக்கு மஇகாவின் மூலமும், எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் மூலமும் எங்களால் என அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க நாங்கள் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உறுதிமொழியையும் இந்த வேளையில் வழங்க விரும்புகிறேன்.

நம் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி, அவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்காமல் பாதுகாத்துப் பார்த்துக் கொண்டாலே, நமது இந்திய சமுதாயம் இப்போது பெற்றுவரும் முன்னேற்றங்களைப் போல மேலும் பன்மடங்கு முன்னேற்றங்களைக் காணும் என உறுதியாக நம்பலாம். அந்த இலக்கோடு அனைத்துத் தந்தையரும் பாடுபட வேண்டும் என இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே வேளையில் நமது தந்தையர்களின் கடந்த கால பங்களிப்பையும், நம் முன்னேற்றத்திற்கு அவர்கள் அயராது பாடுபட்டதையும் இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்.

அன்புடன்,

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்,
தேசியத் தலைவர்
, மலேசிய இந்தியர் காங்கிரஸ்,
தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர்