Home நாடு சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “பிள்ளைகள் வாழ்வு செழிக்க தங்களை வருத்திக் கொள்ளும் அப்பாக்கள்”

சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “பிள்ளைகள் வாழ்வு செழிக்க தங்களை வருத்திக் கொள்ளும் அப்பாக்கள்”

445
0
SHARE
Ad

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தந்தையர் தின நல்வாழ்த்துகள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – குறள் 67

எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப உலகில் வாழும் தந்தையர்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள். தந்தையின் தலையாய கடமைகளில் ஒன்று பிள்ளைகளைக் கல்வியில் சிறந்தவர்கள் ஆக்குவதே. அதற்கான வாய்ப்பையும், வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டியது தந்தையின் கடமை. பொருளாதார ரீதியாக குடும்பத்தை உயர்த்தும் அப்பாக்களுக்கு முதன்மையாக இருப்பது பிள்ளைகளின் நலனும், வளர்ச்சியும், அவர்களின் தேவையுமே.

தலைமைத்துவம் என்பது நிறுவனங்களிலும், இயக்கங்களிலும், அரசியலிலும் மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் அது சரியாக இருந்தால்தான் நாளைய தலைமுறை சிறப்பாக வரும். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் தந்தை, தன் பிள்ளைகளை, உயர்ந்த உன்னத நிலைக்குக் கொண்டு வருவதற்காக ஆற்றுகின்ற பங்கு அளப்பரியது.

#TamilSchoolmychoice

நேற்றைய தலைமுறை அப்பாக்களிடம் கண்டிப்பை அதிகமாகக் காணலாம், காரணம் பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருந்தால்தான் அவர்களை நல்வழியில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை. அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறை அப்பாக்கள் அப்படியல்ல. அன்பும், அரவணைப்பும் நிறைந்த தாயுள்ளம் கொண்ட தந்தையர்களே அதிகம். ஒரு வயதிற்குப் பிறகு பிள்ளைகளைடம் நண்பனைப் போல் பழக வேண்டும் எனும் மனப்பக்குவத்திற்கு இன்றைய தந்தையர்கள் வந்துள்ளனர்.

ஆனாலும் நம்மைச் சுற்றி நன்மை, தீமை எப்போதுமே உண்டு. அதில் நல்லது, கெட்டதை உணர்ந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளும் திறமையை இன்றைய தலைமுறையிடம் விதைக்க வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு செழிப்பாக இருக்க, தன்னை வருத்திக் கொள்ளும் அப்பாக்கள் அனைவருக்கும் மீண்டும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

“தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே”

அன்புடன்

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்