Home Video ‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 1

‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 1

936
0
SHARE
Ad

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஒலிப்பேழை’ என்னும் தளம். இந்த வாரம் சை.பீர் முகம்மது எழுதி 2019-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட “அக்கினி வளையங்கள்” நாவலின் பாகம் 1 இடம் பெறுகிறது – ஆசிரியர்)

சை.பீர்முகம்மது நாவல் குறித்த விஜயலட்சுமியின் முன்னுரை

இந்த நாவல் ஏன் முக்கியமானது என்ற கேள்வி இருக்குமாயின் அதற்கான பதில்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இலக்கியத்தின் நோக்கம் வரலாற்றைச் சொல்வதல்ல. அப்படி வரலாற்றை மட்டும் முன்னிறுத்துமாயின் அது பெருமளவில் இலக்கியத் தன்மையை இழந்து விடுகிறது. ஒரு வரலாற்று சூழலில், நிகழ்வில் பலதரப்பட்ட சமூக அடுக்குகளிலிருக்கும் மனிதர்களின் குரலை, தடம் மாறும் வாழ்வை அதிலிருந்து உருகொள்ள சாத்தியமான வாழ்வு குறித்தான தரிசனத்தைக் கொண்டிருக்கும் இலக்கியங்கள் காலம் கடந்தும் நிலைக்கின்றன. தேர்ந்த வாசகர்களாலும் விமர்சகர்களாலும் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டு மேலெடுக்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அவ்வகையில் அக்கினி வளையங்கள் நாவல் தன்னளவில் இருவேறு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வெட்டாக சண்முகம் பிள்ளை, முத்து என்பதாக மலாயா வரலாற்றின் பெருவரைவில் சிதறிக்கிடக்கும் எளிய மனிதர்களின் வாழ்வை சொல்கிறது. இன்னொரு வெட்டாக முழுக்க மலாயா கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டத்தையும் அதில் இந்தியர்களின் ஈடுபாட்டையும், பல்லின சமூகத்தின் பங்களிப்பையும் சிக்கல்களையும் சொல்கிறது.

மிக வலுவான கதைக்களம், கதாபாத்திரங்கள்வழி எழுத்தாளர் சை. பீர்முகம்மது எளிய மக்களின் பார்வையிலிருந்து மலாயா வரலாற்றில் சில முக்கியமான தருணங்களையும் அதில் ஊடாடிய அவர்தம் வாழ்வையும் காட்டியிருக்கிறார். ஊடே, மானுட வாழ்வு குறித்த தரிசனத்தையும் வாசகனுக்கு சாத்தியமாக்கியிருப்பது இந்நாவலின் வெற்றி.

ஒவ்வொரு ஞாயிறும் ஒரு பாகமென 24 ஞாயிறுகள் இந்நாவல் ஒலிவடிவில் பதிவேறும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் முழுமையாக செவிமடுங்கள். உங்களுக்கு இந்நாவல் என்னவாக இருக்கிறது என்று கருத்துப்பதிவிடுங்கள்.

ஒலிப்பேழை – இது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரல்.

ஒலிப்பேழை வலையொளியை Subscribe செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள். நமது படைப்பையும் படைப்பாளர்களையும் கொண்டாடுவோம்.

-விஜயலட்சுமி

கீழ்க்காணும் இணைப்பில் சை.பீர் முகம்மதுவின் “அக்கினி வளையங்கள்” நாவலின் முதல் பாகத்தை எஸ்.பி.பாமா குரலில் கேட்கலாம்: