கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் ஆளுங் கட்சிகள் – எதிர்க்கட்சிகள் என இரண்டு தரப்புகளும் ஒருமனதாக இன்று நாடாளுமன்றத்தில் கட்சித் தாவல் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றின.
கட்சித் தாவல் சட்ட அமுலாக்கத்திற்காக மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்ததால், இந்தச் சட்ட நிறைவேற்றத்திற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் தேவைப்பட்டது.
இந்த சட்டத்தை பிரதமர் நேற்று புதன்கிழமை (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக சமர்ப்பித்தார். இரண்டு நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட மொத்தம் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டம் குறித்த விவாதங்களில் பங்கு பெற்றனர்.
11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இன்றைக்கு பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அவர்களைத் தவிர வந்திருந்த அனைத்து 209 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தாவல் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரணத்தால் 2 தொகுதிகள் இடைத் தேர்தல் நடத்தப்படாமல் காலியாக இருக்கின்றன.