ஆகஸ்டு 10 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் உள்ளூர் தமிழ் காதல் தொடர் ‘மகரந்தம்’ முதல் ஒளிபரப்புக் காணுகிறது
கோலாலம்பூர் – ஆகஸ்டு 10, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் மகரந்தம் எனும் உள்ளூர் தமிழ் காதல் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். உள்ளூர் திரைப்பட இயக்குநரான தினேஷ் சாரதி கிருஷ்ணன் கைவண்ணத்தில் மலர்ந்த இத்தொடரில் இர்ஃபான் சைனி, சாந்தினி கோர், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி மற்றும் தாஷா கிருஷ்ணகுமார் உட்படப் பலப் பிரபல உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ விண்மீன்), மகேஸ்வரன் பாலக்கிருஷ்ணன் கூறுகையில், “உள்ளூர் இரசிகர்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் தரமான மலேசிய உள்ளடக்கத்தை வழங்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு மகரந்தம் தொடரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வளர்ந்து வரும் பிரபல உள்ளூர் திறமைகளுடன் பணிபுரிவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மகரந்தம் தொடரின் இயக்குநர், தினேஷ் சாரதி கிருஷ்ணன், கூறுகையில், “இது எனது முதல் தொடர் என்பதால் மகரந்தம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தத் தொடரை வெற்றிபெறச் செய்ய முழு அணியினரும் பங்களித்துள்ளனர். இது இதயத்தைச் சுண்டி இழுக்கும் பல கூறுகளைக் கொண்ட ஒரு காதல் தொடர். வாழ்க்கை மற்றும் அன்பின் கதையைச் சித்தரிப்பதால், மகரந்தம் அனைத்துத் தரப்பு மக்களுடனும் தொடர்புடையது. மேலும், உங்கள் கடந்தக் காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும், பிரிந்த உறவுகளைச் சரிசெய்யவும் இத்தொடர் உங்களைத் தூண்டும்” என்று கூறினார்.
மதன் மற்றும் சுசீலா இருவரின் தனிப்பட்டக் கசப்பான முந்தையத் திருமண வாழ்க்கையை 22-அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் சித்தரிக்கிறது. புதிய வாழ்க்கைத் துணையைத் தேடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்த அவர்களின் குடும்பங்கள் உதவுகின்றன. இருவருக்குள்ளும் காதல் எப்படி மலர்கிறது என்பதுதான் கதையின் மையக்கரு. கணேசன் மனோகரன் மற்றும் எம். ஜெகதீஸ் பாடிய, எம். ஜெகதீஸ் இசையமைத்தத் தொடரின் கருப்பாடலை இரசிகர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ உலகம், யுடியூப் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றில் கேட்டு இரசிக்கலாம்.
மகரந்தம் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.