நஜிப் அடுத்து என்ன செய்யப் போகிறார்?

  551
  0
  SHARE
  Ad

  கோலாலம்பூர் : கடந்த ஓரிரு நாட்களாக கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நஜிப் துன் ரசாக் மீதான எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களுக்கும், சட்டம் தெரிந்தவர்களுக்கும் ஒரு குழப்பம் எழுந்திருக்கும்.

  நஜிப்பின் மனுக்களும், மேல்முறையீட்டு அம்சங்களும் வழக்கை தாமதப்படுத்துவதற்கான வியூகங்களா?

  அல்லது, உண்மையிலேயே அவருக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படுகிறதா? என்ற குழப்பம்தான் அது!

  #TamilSchoolmychoice

  கூட்டரசு நீதிமன்றம் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுடன் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

  நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தெய்க் தனக்கு போதிய கால அவகாசத்தை நீதிமன்றம் தராததால் நஜிப்பைத் தொடர்ந்து தற்காப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். எனினும் நீதிமன்றம் அதற்கு அனுமதிக்கவில்லை.

  ஆனால், நஜிப்போ, தனக்கு இப்போது தற்காப்பு வாதம் புரிய வழக்கறிஞர் இல்லை எனக் குமுறியிருக்கிறார். தனது வாழ்க்கை, சுதந்திரம், நியாயமான விசாரணை என எல்லாமே ஊசலாடும் நெருக்கடி நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக நஜிப் கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

  ஆனால், நீதிமன்றமோ, சில வாரங்களுக்கு முன்னரே எந்த ஒரு நிலையிலும் மேல்முறையீட்டு விசாரணை ஒத்திவைக்கப்படாது என எச்சரித்திருந்தது. இதைத் தெரிந்துதான் வழக்கறிஞர் ஹிஷாம் நஜிப்பைப் பிரதிநிதிக்க முன்வந்தார். வந்த முதல் நாளே அவருக்கு எத்தனை பக்க ஆவணங்கள் இருக்கின்றன என்பது தெரிந்திருக்கும். முதல் நாளே அவர் வழக்கை ஒத்தி வைக்க மனு ஒன்றைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படிச் சமர்ப்பித்து நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் வேறு விஷயம்.

  ஆனால், பாதி வழியில் அவர் நஜிப் சார்பில் சமர்ப்பித்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருக்கும் நிலையில் – வழக்கை ஒத்திவைக்கவும் நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை – என்பதால் வழக்கறிஞர் ஹிஷாம் விலகிக் கொள்ள முன்வந்திருக்கிறார்.

  ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்பதால், அடுத்து என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

  நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூட்டரசு நீதிமன்றம் நஜிப்பின் நிலைப்பாடு தெரியவரும்.