Home நாடு சாஹிட் விடுதலை – போராட்டம் முடியவில்லை – சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு

சாஹிட் விடுதலை – போராட்டம் முடியவில்லை – சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு

465
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) தொடர்பான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை சட்டத் துறை அலுவலகம் (அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (ஏஜிசி) தாக்கல் செய்துள்ளது.

இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 26) மாலை 4.40 மணிக்கு மேல்முறையீட்டுக்கான முன்அறிவிப்பு ஆவணம் தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23), ஷா ஆலம் உயர் நீதிமன்றம் முன்னாள் துணைப் பிரதமரை அனைத்து 40 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.

#TamilSchoolmychoice

வழக்கை விசாரித்த நீதிபதி முகமட் யாசித் முஸ்தபா, அகமது சாஹிட் மீதான முதன்மையான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, தற்காப்பு வாதம் அவர் புரிய வேண்டியதில்லை எனக் கூறி விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்தார்.

அகமட் சாஹிட் மீதான அரசுத் தரப்பு வழக்கு தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணங்களில் – மூன்று முக்கிய சாட்சிகள் நம்பகத்தன்மை இல்லாததுதான் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

அகமட் சாஹிட்டுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையின் விவரங்கள்  தொடர்பான சில தரவுகள் விடுபட்டுள்ளதால், அதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட பதிவேட்டின் நம்பகத்தன்மையையும் நீதிமன்றம் சந்தேகித்தது.

தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருன், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுப்பதற்கு முன் சட்டத்துறை அலுவலகம் விடுதலைக்கான காரணங்களை ஆய்வு செய்யும் என்று கூறியிருந்தார்.