Home Photo News 15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?

15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?

503
0
SHARE
Ad

(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார்  இரா. முத்தரசன்)

உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில்  பிரிட்டனையும்  அமெரிக்காவையும்  முதன்மையாகக் குறிப்பிடுவார்கள்.

இந்த இரண்டு நாடுகளின் அடிப்படையில்தான்  உலகின் பல ஜனநாயக நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பிரிட்டனில்   நாடாளுமன்றத்தை முதன்மையாக வைக்கும்  ஜனநாயக அரசியல் பின்பற்றப்படுகிறது. அந்நாட்டின் தலைவராக பிரதமர் செயல்படுவார். பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முன்வைத்துத்தான் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். கன்சர்வேட்டிவ் (Conservative), லேபர் (Labour), லிபரல் (Liberal) ஆகிய மூன்றும் அந்நாட்டின் முக்கியக் கட்சிகள்.

அமெரிக்காவிலோ அதிபர் என்ற தனிமனிதனின் செல்வாக்கை – அதிகாரத்தை வைத்து – அந்நாட்டின் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. அங்கு நாடாளுமன்றம் என்பது இரண்டாம் பட்சம்தான். அனைத்து விவகாரங்களிலும்  அதிபர்தான் முடிவெடுப்பார்.

#TamilSchoolmychoice

பிரிட்டனின் நாடாளுமன்ற அடிப்படையிலான அரசியல் அமைப்பை கொண்டது நமது மலேசியா. இந்தியாவும் அதே போன்ற அரசியலமைப்பைக் கொண்டது தான்.

இதுபோன்ற நாடாளுமன்ற அரசியலமைப்பைப் பின்பற்றும் நாடுகளும் மெல்ல மெல்ல  தனிமனித செல்வாக்கை முன்நிறுத்தி – அமெரிக்க அதிபர் பாணியில் – பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் சூழ்நிலைக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2014 இந்தியத் தேர்தல் – 2018 மலேசியத் தேர்தல் – ஓர் ஒப்பீடு

உதாரணத்திற்கு 2014ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் – காங்கிரசா? பாஜகவா? – எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற பிரச்சாரங்களை விட, நரேந்திரமோடி அடுத்தப் பிரதமராக வேண்டுமா? அல்லது மீண்டும் மன்மோகன்சிங் பிரதமராக வேண்டுமா? என்ற அடிப்படையில்தான்  பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற நமது 14-வது மலேசியத் தேர்தலிலும் அடுத்தப் பிரதமர் மீண்டும் தேசிய முன்னணியின் சார்பில் நஜிப்பா? அல்லது பக்காத்தான் ஹாரப்பான் எதிர்க்கட்சிக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்கும் துன் மகாதீரா? என்ற அடிப்படையில்தான் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில் துன் மகாதீர் என்ற தனிமனிதனுக்குக் கிடைத்த செல்வாக்கினால்தான் – அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற பரவலான வாக்காளர்களும் – குறிப்பாக மலாய் சமூகமும் அவருக்கு வழங்கிய ஆதரவினால்தான் – பக்கத்தான் ஹராப்பான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது.

60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆதிக்கமும் வீழ்ச்சி கண்டது.

தேசிய முன்னணிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது என்பது உண்மையா?

இப்போது 15ஆவது பொதுத் தேர்தலை நோக்கி நாடு விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வெற்றி வாகை சூடப் போவது கட்சி அரசியலா? அல்லது தனி நபர் செல்வாக்கா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அண்மையக் காலமாக வெளியிடப்பட்டுவரும் அரசியல் ஆய்வுகள்- கண்ணோட்டங்கள் – அடிப்படையில் இரண்டு விஷயங்கள் தெளிவாகியுள்ளன.

கட்சி  அல்லது கூட்டணி என்று பார்க்கும்போது பெருவாரியான மக்களின் ஆதரவு 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கே எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்னொரு கோணத்தில்  அடுத்தப் பிரதமராக யார் வரவேண்டும் என்ற கருத்துக் கணிப்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராகத் திகழ்கிறார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரபிசி ரம்லியும் மக்களிடத்தில் குறிப்பாக, இளைஞர்களிடத்தில் மிகுந்த செல்வாக்கையும் பிரபல்யத்தையும் கொண்டவர். அவரும் அன்வாருடன் கைகோத்திருப்பதால் அவர்கள் இருவரின் பிரபல்யமும் பக்கத்தான் கூட்டணிக்கு முக்கிய பலமாகத் திகழ்கின்றது. பிகேஆர் கட்சியின் இன்னொரு பக்கபலம் அன்வாரின் மகள் நூருல் இசா. பெண்களிடத்திலும் இளைஞர்களிடத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவர்.

இன்னொரு புறத்தில் புதிய கூட்டணி அமைத்திருக்கும் துன் மகாதீர் நானே அடுத்தப் பிரதமராக வேண்டும் என பலரும் விரும்புகின்றனர் என்று கூறியிருக்கின்றார். ஓராண்டுக்கு மட்டும் பிரதமராக இருந்து நாட்டின் கொள்கைகளை வகுக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், அப்படியே ஓராண்டுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தாலும், ஓராண்டு முடிந்ததும் ஒதுங்கிக் கொள்வாரா என்ற கேள்வியை பொதுமக்களிடமே விட்டு விடுவோம். 2018-இல் அவர் என்னென்ன செய்தார் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.

டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமை தாங்கும்  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தங்களின் பிரதமர் வேட்பாளராக மொகிதினையே முன்னிருத்தியிருக்கிறது.

தேசிய முன்னணியோ வாயளவில் பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சப்ரிதான் என்று கூறினாலும் – அம்னோவுடன் இணைந்த தங்களின் கூட்டணி பலத்தை மட்டுமே அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நஜிப்பின் செல்வாக்கு குறைந்து விட்டதா?

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சிறையில் இருப்பதால்  அவரின் நேரடித் தாக்கம் அம்னோவிலும் தேசிய முன்னணியிலும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

எஸ்.ஆர். சி. இண்டர்நேஷனல் வழக்கில் இறுதி தீர்ப்பு கூட்டரசு நீதிமன்றத்தால்  வெளியிடப்படும் வரை நஜிப்பின் பிரச்சாரமும்  அவரின் சமூக ஊடகக் கருத்துகளும் அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் ஆதரவாகத் திகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

ஆனால்,  அவரின் சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதும் நஜிப்பின் செல்வாக்கு கிடுகிடுவென சரிந்தது என்பதையும் மறுக்க முடியாது. அன்வார் இப்ராகிம் ஒரே ஒரு வழக்கைத்தான் எதிர்நோக்கினார். அதன் மூலம் ஒரே ஒரு சிறைத்தண்டனையைத்தான் பெற்றார்.

ஆனால்,  12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் நஜிப்பிற்கு அடுத்தடுத்து மேலும் நான்கு வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.  அவரின் மனைவி ரோஸ்மாவுக்கும் அவர் மீதான ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், 69 வயதாகிவிட்ட நஜிப், மீண்டும் அரசியலுக்கு திரும்புவார். அவரது செல்வாக்கு தேசிய முன்னணிக்குப் பயன்படும் என்ற நம்பிக்கைகள் நசிந்துவிட்டன.

அப்படியே நஜிப்புக்கு வாக்காளர்களிடையே செல்வாக்கு இருப்பதாக  வைத்துக் கொண்டாலும்  – அவரின் ஊழல் வழக்குகளால்  – அவர் மைய அரசியலுக்குத் திரும்பக் கூடாது என்ற எதிர்ப்பும்  – சரிசம அளவில் மக்களிடையே நிலவுகிறது.

சாஹிட் ஹாமிடியின் நிலைமை என்ன?

அம்னோவின் தேசியத் தலைவர் ஸாஹிட் ஹமிடிக்கும் இதே போன்ற இக்கட்டான நிலைமைதான்.

அவரின் விஎல்என் ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுதலையாகிவிட்டார். இருந்தாலும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

சாஹிட் தன் அகால்புடி அறவாரியம் தொடர்பில் மற்றொரு ஊழல் வழக்கையும் எதிர்நோக்கியிருக்கிறார்.

அதிலிருந்தும் விடுதலையானால் மட்டுமே அவரின் செல்வாக்கு அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் பயன்படும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதியானால், அம்னோ-தேசிய முன்னணி செல்வாக்கிலும் பெரும் விரிசல், பாதிப்பு ஏற்படும். இயல்பாகவே, சாஹிட்டுக்கு மாற்றாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக ஏற்றம் பெறுவார்.

சாஹிட் அம்னோ தலைவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் – அடுத்த அம்னோ தேசியத் தலைவருக்கான தேர்தலில் இஸ்மாயில் சாப்ரியா – முகமட் ஹாசானா – என்ற போட்டியே எழும்!

இந்நிலையில் தேசிய முன்னணி என்ற கூட்டணியின் செல்வாக்கையும் அம்னோ கட்சியில் செல்வாக்கையும்  முன் வைத்துதான் அம்னோ தலைவர்கள் நம்பிக்கையுடன் பயணிக்கின்றனர்.

தனிநபர் செல்வாக்கை முன்வைக்கு பக்காத்தான் கூட்டணி…

ஆனால், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியோ அன்வார் இப்ராகிம் – ரபிசி ரம்லி என்ற இரு செல்வாக்குப் பெற்ற  தலைவர்களை முன்வைத்து தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

இது அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற பிரச்சாரமாகும். ஒரு தனிமனிதனின் செல்வாக்கு, குணநலன்கள், ஆற்றல் ஆகியவற்றை முன்னிருத்தும் அரசியல் பிரச்சார முறையாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியா? குடியரசு கட்சியா? என்ற தேர்வுகள் முன்வைக்கப்படுவதில்லை. மாறாக, அதிபராகப் போட்டியிடுபவர்களின் திறன்கள்-செல்வாக்குதான் பிரச்சாரங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது பிரிட்டன் பொதுத் தேர்தல்களில் அடிக்கடி முன்வைக்கப்படும் கன்சர்வேட்டிவ் கட்சியா அல்லது லேபர் (தொழிலாளர்) கட்சியா என்ற அடிப்படையிலான பிரச்சாரமாகும்.

கட்சி கட்டமைப்பு என்று வரும்போது தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பானைவிட வலுவாக திகழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், தனி மனித செல்வாக்கு – அடுத்த பிரதமராக வர அனைத்துத் தகுதிகளும் கொண்டவர் – என்று பார்க்கும்போது அன்வார் இப்ராகிம்தான் முன்னிலை வகிக்கிறார். மொகிதின் யாசினுக்கும், பெரிக்காத்தான் கூட்டணிக்கும் அவ்வளவாக செல்வாக்கில்லை.

15ஆவது பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணியா பக்கத்தான் ஹராப்பானா? என்ற கேள்வியுடன் கூடிய பிரச்சாரத்தில் வாகை சூடப் போடப் போவது எந்தக் கூட்டணி?

அல்லது தனிமனித செல்வாக்கை அடிப்படையாக வைத்து வாக்காளர்கள் கட்சிகளுக்கு வாக்களிப்பார்களா? அதன் மூலம் அடுத்த பிரதமராக வரவேண்டியவர் யார்? அன்வார் இப்ராகிமா? இஸ்மாயில் சப்ரியா? மொகிதின் யாசினா? அல்லது மீண்டும் துன் மகாதீரா? – என்பதை நிர்ணயிப்பார்களா?

-இரா.முத்தரசன்