Home நாடு பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?

பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?

528
0
SHARE
Ad

பெக்கான் : நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் அவரே மீண்டும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வாரா அல்லது அவருக்குப் பதிலாக அவரின் மகன் முகமட் நிசார் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நஜிப் மீண்டும் பெக்கானில் போட்டியிடுவாரா என்பது குறித்து அவரின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா எதுவும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எனினும் இறுதி முயற்சியாக நஜிப் பெக்கானில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நஜிப்புக்குப் பதிலாக முகமட் நிசார் பெக்கானில் போட்டியிடத் தயாராகி வருகிறார். அந்தத் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராகவும் நஜிப்பின் மூத்த மகனான அவர் பதவி வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில்  தனது வருமான வரி வழக்கிற்குத் தீர்வு கண்டிருப்பதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நஜிப் துன் ரசாக்கின் மகனான முகமட் நிசார் தயாராகி வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலமாகத் தற்காத்து வரும் தொகுதி பகாங் மாநிலத்தில் உள்ள பெக்கான். அவருக்கு முன்பாக அவரின் தந்தையாரும் முன்னாள் பிரதமருமான துன் அப்துப் ரசாக் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்தார்.

துன் ரசாக் 1976-ஆம் ஆண்டில் மறைந்ததைத் தொடர்ந்து அப்போது முதல் அந்தத் தொகுதியைத் தற்காத்து வருகிறார் நஜிப்.

தற்போது 1எம்டிபி தொடர்பான ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நஜிப் கூட்டரசு நீதிமன்றத்தின் மறு ஆய்வு மேல்முறையீட்டுத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்.