Home Photo News ஜசெகவில் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அலைகள் – தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

ஜசெகவில் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அலைகள் – தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?

448
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட ஜசெகவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி அலைகள் நிலவுகின்றன. அதுகுறித்து விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)

2008 பொதுத் தேர்தல் காலகட்டம்! பினாங்கிலுள்ள பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியை அப்போது வலம் வரும்  வாய்ப்பு கிடைத்தது.

பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணி – கெராக்கான் கட்சி – இணைந்த வலுவான மாநில அரசாங்கம் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கெராக்கானைச் சேர்ந்த கோ சூ கூன்  பினாங்கு மாநில முதலமைச்சராக இருந்தார். பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் கெராக்கான்– தேசிய முன்னணி  சார்பில் போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

2007இல் நடைபெற்ற ஹிண்டாராஃப் போராட்டங்களின் விளைவாக இந்தியர்களிடையே தேசிய முன்னணிக்கு எதிராக, வெறுப்பும்-எதிர்ப்பும் கலந்த அலை – அனலாக வீசிக்கொண்டிருந்த தருணம் அது.

சிறை வாசம் முடிந்து அன்வார் இப்ராஹிம், பக்கத்தான் ராயாட் கூட்டணிக்குத் தலைமையேற்று அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு எதிராக  முன்னெடுத்த பொதுத் தேர்தல் அது.

சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதாலும் முதலைச்சரே வேட்பாளராக களமிறங்கும் தொகுதி என்பதாலும் பத்து கவான் தொகுதியில் கோ சூ கூன் சுலபமாக வெற்றி அடைவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், உச்சகட்டப் பிரச்சாரங்களின்போது அவரின்  தேர்தல் அலுவலகத்தை பார்த்தபோது, அது வெறிச்சோடிக் கிடந்த கோலம் சில செய்திகளை மறைமுகமாக தெரிவித்தது.

அந்த 2008 பொதுத் தேர்தலில் கோ சூ கூனை எதிர்த்து ஜசெக சார்பில்  நிறுத்தப்பட்ட  புதுமுக வேட்பாளர் பேராசிரியர் ப. இராமசாமி. அதுதான் அவர் முதன்முறையாகப் போட்டியிட்ட பொதுத் தேர்தல்.

சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதியில் ஒரு சீன வேட்பாளரை எதிர்த்து – அதுவும் வலிமை வாய்ந்த முதலமைச்சரை எதிர்த்து – முதன் முறையாகப் போட்டியிடும் புதுமுக இந்தியர் ஒருவரை ஜசெக நிறுத்துகிறதே – என்ற ஆச்சரியங்கள் – சர்ச்சைகள் – ஜசெக அரசியல் வட்டாரங்களில் அப்போது எழுந்தன.

அதே தேர்தலில் பினாங்கிலுள்ள பிறை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார் இராமசாமி. பொதுத் தேர்தல் முடிவுகள் வந்தபோது,  பிறை சட்டமன்றத் தொகுதியில்  வெற்றி பெற்ற இராமசாமி, பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் 9,485 வாக்குகள் பெரும்பான்மையில் கோ சூ கூனை வீழ்த்திக் காட்டினார்.

அந்தப் பொதுத் தேர்தலில்  பினாங்கு மாநிலத்தையும்  ஜசெக கைப்பற்றியது. இராமசாமியும் துணை முதல்வராக முதன் முதலாக  நியமிக்கப்பட்டார்.

14 வருடங்கள் கழித்து மீண்டும் பத்து கவான் வேட்பாளர் தேர்வில் சர்ச்சை

14 வருடங்கள் கழித்து தற்சமயம் பத்து கவான் தொகுதிக்குப் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் யார் என்ற தேர்வில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த இரண்டு தவணைகளாக  அந்தத் தொகுதியைத் தற்காத்து வருகிறார் கஸ்தூரி பட்டு. இந்த முறை அவர் போட்டியிடவில்லை என்பதால் அவருக்குப் பதிலாக ஜசெக சார்பில் சீன வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொகுதியில் கஸ்தூரி பட்டுக்குப் பதிலாகப் போட்டியிட ஆர்வம் கொண்டிருந்த இந்திய வேட்பாளர்களிடையே இதனால் அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன.

மேலும், சில தொகுதிகளில்  ஜசெகவின் வேட்பாளர் தேர்வுகளும்  சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. கண்டனங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.

குறிப்பாக, இந்தியர்கள் ஜசெக தொகுதிகளில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி அதில் ஒன்று.

சார்ல்ஸ் சந்தியாகோவின் குமுறல்

2008 முதல் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 3 தவணைகளாக வெற்றி பெற்று வந்திருப்பவர் சார்ல்ஸ் சந்தியாகோ. இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டார். ஆனால், சரியான காரணங்கள் இன்றி அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதற்கான விளக்கங்கள் இல்லை. பலரும் – சில சமூக இயக்கங்களும் – அவருக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதுதான் அவரது கடைசித் தவணை என அவருக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது என ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தன்னிடம் யாரும் அவ்வாறு தெரிவித்ததில்லை என சார்ல்ஸ் கூறுகிறார்.

சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, சார்ல்ஸுக்கு இதுதான் கடைசித் தவணை என்பது குறித்து கூறப்பட்டுவிட்டது எனக் கூறியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த சார்ல்ஸ், அது உண்மை இல்லை. எனக்கு கண்ணியக் குறைவை ஏற்படுத்தீர்கள் என சாடியிருக்கிறார்.

மூன்று தவணைகள் இருந்துவிட்டார் என்பதால் சார்ல்ஸ் மாற்றப்படுகிறார் என சிலர் கூறியிருக்கின்றனர். ஆனால்,  சீபூத்தே தொகுதியில் ஐந்து தவணைகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் திரேசா கொக் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

ஈப்போ பாராட் தொகுதியில் கடந்த 5 தவணைகளாக  இருந்து வரும்  குலசேகரனும் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு? என்ற கேள்விகளும் ஜசெக அதிருப்தியாளர்களிடையே எழுந்துள்ளன.

இதனால் வேட்பாளர்கள் தேர்வில்  ஜசெகவில் வேண்டியவர் – வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற எண்ண ஓட்டமும் ஏற்பட்டுள்ளது.

தெலுக் இந்தானிலும் அதிருப்தி அலைகள்

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி  சார்பில் ம.இ.கா. போட்டியிடும் என்றும் அதன் வேட்பாளராக  டத்தோ டி. முருகையா நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு மீண்டும் ஙா கோர் மிங் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பாசிர் பெடாமார்.

கடந்த முறை பாசிர்  பெடாமார் சட்டமன்றத் தொகுதி இந்திய வேட்பாளரான தேரன்ஸ் நாயுடுவுக்கு வழங்கப்பட்டது. மீண்டும் அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவருக்குப் பதிலாக  சீன வேட்பாளர் வூ கா லியோங் என்பவரை ஜசெக நிறுத்தியுள்ளது.

மற்றொரு சட்டமன்றத் தொகுதியான சங்காட் ஜோங்கில் பட்ருல் ஹிஷாம் படாருடின் என்ற மலாய் வேட்பாளரை ஜசெக நிறுத்துகிறது.

தேசிய முன்னணி சார்பில்  இந்திய வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதால்  ஜசெக சார்பில் நாடாளுமன்றத்திற்கு சீன வேட்பாளரை நிறுத்தும் அதே நேரத்தில் சட்டமன்றத்திற்கு  இந்தியர் ஒருவரை நிறுத்தியிருந்தால் வாக்குகள் சேகரிப்பதில்  சாதகங்கள் இருக்கும்.

ஆனால், இப்போதோ, ஜசெக நிறுத்தும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியர்கள் அல்லாதவர் என்பதால்,  தெலுக் இந்தானிலுள்ள இந்திய வாக்குகள் ஜசெக பக்கம் போகாமல் ம.இகா. வேட்பாளர் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கின்றனர் தெலுக் இந்தானின் உள்ளூர் அரசியல் அறிந்த சிலர்.

கூட்டரசுப் பிரதேசத்தில்  இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா?

பல இன அரசியல் பேசும்  ஜசெக, கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள  10 நாடாளுமன்றத்  தொகுதிகளில் 5-இல் போட்டியிடுகிறது.

ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் இந்த ஐந்து தொகுதிகளிலும் சீன வேட்பாளர்களையே அது நிறுத்தி வந்திருக்கிறது.

“ஏன் இங்கெல்லாம் இந்திய வேட்பாளரை நிறுத்தக்கூடாதா? சீன வேட்பாளர்களை மட்டும்தான் ஜசெக கூட்டரசுப் பிரதேசத்தில் நிறுத்துமா?” என சிலர் ஜசெகவில் கேள்வி எழுப்புகின்றனர்.

கேமரன் மலையிலும் இந்திய வேட்பாளர் இல்லை

2008 – 2013 பொதுத் தேர்தல்களில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில்  வேட்பாளராக ஜசெக சார்பில் நிறுத்தப்பட்டவர் வழக்கறிஞர் எம். மனோகரன். அந்தத் தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தாலும் 2019 கேமரன் மலை இடைத் தேர்தலிலும் மனோகரனே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், இந்த முறை அங்கு ஜசெக சார்பில் சீன வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இதுவும்  அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவநேசனுக்கு மீண்டும் சட்டமன்றமா?

கடந்த மூன்று தவணைகளாக சுங்கை சட்டமன்றத்தை ஜசெக சார்பில் வெற்றிகரமாக தற்காத்து வந்திருப்பவர் சிவநேசன். சிறந்த வழக்கறிஞர், மக்கள் சேவையாளர். இந்திய சமூகப் பிரச்சினைகளில் தெளிவான கண்ணோட்டத்துடன் துணிச்சலுடன் குரல் கொடுப்பவர். பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த முறை அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு  நிலவியது.

ஆனால், மீண்டும் அவருக்கு சட்டமன்றத் தொகுதியே வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் செய்கிறோம் என பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பதாகக் கூறும் ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், 60 வயதைக் கடந்துவிட்ட சிவநேசன் போன்றோருக்கு  நாடாளுமன்ற வாய்ப்பை தந்திருக்கலாமே என்ற முணுமுணுப்புகளும் ஜசெக இந்திய உறுப்பினர்களிடையே எழுந்திருக்கின்றன.

வேட்பாளர்  மாற்றத்தால் பெந்தோங் பறிபோகுமா?

வோங் தாக் (நடப்பு பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்) – லியோவ் தியோங் லாய்)

இவ்வாறாக இந்தியர்கள் வேட்பாளர்களாக  ஜசெக சார்பில் தேர்வு செய்யப்படுவதில் குளறுபடிகளும்  அதிருப்திகளும்  நிலவும் அதே வேளையில் மற்ற தொகுதிகளிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உதாரணம் பெந்தோங்!  அங்கு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தாக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக மலாய் வேட்பாளர் சைபுரா ஓத்மான் அங்கு போட்டியிடுகிறார்.

பெந்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் லியோவ் தியோங் லாய் பெந்தோங் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் ஒரே ஒரு தவணை மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வோங் தாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேட்டால் நாங்கள் அவருக்கு மாற்றாக கேமரன்மலை தொகுதியை வழங்கினோம், ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்.

ஒரே மாநிலமாக இருந்தாலும் பெந்தோங் எங்கிருக்கிறது? கேமரன்மலை எங்கிருக்கிறது? அதிலும் வோங் தாக் பெந்தோங்கைச் சேர்ந்த உள்ளூர்காரர். அவரை கேமரன்மலைக்கு அனுப்புவது எப்படி நியாயமாகும்?

பெந்தோங்கில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் வோங் தாக்.

இதன் காரணமாக பெந்தோங் ஜசெகவிடமிருந்து இந்த முறை பறிபோகலாம் என்ற கணிப்பும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஜசெகவில்  நிலவும் அதிருப்தி அலைகள் எதிர்ப்பு வாக்குகளாக மாறி அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அதற்கு தோல்வியை ஏற்படுத்துமா?

அல்லது ஜசெக– பக்கத்தான் ஆதரவு அலைகளினால் இந்த அதிருப்திகள் –சிறு குமிழிகளாக அடையாளமில்லாமல் – அதிர்வுகளை ஏற்படுத்தாமல் – மறைந்து போய்விடுமா? என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள்தான் காட்டும்.

-இரா.முத்தரசன்