Home Photo News “டும் டும் டுமீல்” – திரைவிமர்சனம் – விறுவிறுப்பு, நகைச்சுவை, குடும்ப உறவுகளுக்கான செய்தி –...

“டும் டும் டுமீல்” – திரைவிமர்சனம் – விறுவிறுப்பு, நகைச்சுவை, குடும்ப உறவுகளுக்கான செய்தி – இணைந்த தரமான உள்ளூர் படைப்பு

812
0
SHARE
Ad

கோவிட்-19 பிரச்சனைகளால் தொய்வு கண்டிருந்த உள்ளூர் தமிழ்த் திரைப்பட உலகம் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

‘டும் டும் டுமீல்’ என்ற வித்தியாசத் தலைப்புடன் தீபன் எம்.விக்னேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் எடுத்த எடுப்பிலேயே நம்மைக் கவர்வது விறுவிறுப்பான திரைக்கதை. கொஞ்சமும் தொய்வில்லாமல் பின்னப்பட்டிருக்கிறது.

அதற்கு ஏற்ப, இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் நடிகர்கள். ஏறத்தாழ, மலேசியாவில் அண்மையக் காலங்களில் பிரபலமான அனைத்துக் கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இந்தத் திரைப்படத்தில் நம்மை மட்டுமல்ல – படம் பார்த்த பலரின் கூற்றுப்படியும் – அனைவரையும் கவரும் ஓர் அம்சம் – படம் முழுக்க போரடிப்பு இல்லாமல் அழகாக நுழைக்கப்பட்டிருக்கும் கணவன்-மனைவி உறவு குறித்த அறிவுரைகள். சம்பவங்கள் மூலம் – காட்சியமைப்புகள் மூலம் – இடையிடையே அவை விளக்கப்பட்டிருப்பதால் கதையோடு இணைந்து அந்த உணர்ச்சிகள் சிறந்த முறையில் இரசிகர்களைக் கவரும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கின்றன.

சரி! இனி கதைக்கு வருவோம்!

கதை – திரைக்கதை

திருமணம் ஆகாதவர்கள் வேண்டிக் கொண்டால் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என நம்பப்படும் மாங்கல்யதேவி ஆலயத்தின் பழங்காலச் சிலை காணாமல் போய்விட்டது என்ற சம்பவத்தோடு தொடங்குகிறது படம். அந்த சிலை என்ன ஆனது என்ற தேடல் தொடர்கிறது. திருமணம் ஆகப் போகும் கதாநாயகன் தினேஷ் (இர்பான் சைனி) நான்கு நண்பர்களுடன் ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற – திருமணத்துக்கு முந்திய ஆண்களுக்கான விருந்துக் கொண்டாட்டத்திற்காக பங்கோர் தீவு வருகிறார்.

அவர்கள் பயன்படுத்தும் வாடகைக் காரில் எதிர்பாராதவிதமாக அந்த சிலை வைக்கப்பட்டிருக்கும் பை சிக்கிக் கொள்கிறது. அந்த சிலையைத் தேடும் வில்லன்களின் விரட்டல், அதனால் பார்ட்டிக்கு வந்த நண்பர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்கின்றன.

தினேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் காதலி கீதா (கவிதா சின்னையா) கோலாலம்பூரில் இருக்கிறார். தினேஷின் திருமணத்திற்கு எதிராக சதி செய்கிறான் கீதாவின் மாமன் மகன் (யுவராஜ் கிருஷ்ணசாமி).

இதற்கிடையில் தினேஷூக்கும் கீதாவுக்கும் இடையிலான கடந்த கால கருத்து வேறுபாடுகளாலும் – நிகழ்கால மோதல்களாலும் – திருமணத்திற்கு எதிரான மாமன் மகனின் சதியாலும் – திருமணம் தடைபடும் சூழல் ஏற்படுகிறது.

தினேஷ் – கீதா பிரச்சனைகள் தீர்ந்து அவர்களின் ‘டும் டும்’ நடக்குமா? அல்லது துப்பாக்கிகளுடன் சிலையைத் தேடி விரட்டும் விரட்டும் வில்லன்களால் ‘டுமீல் டுமீல்’ வெடிக்குமா? என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

படத்தின் சிறப்பம்சங்கள்

உள்ளூர் தமிழ்ப் படம் என்றாலே தயாரிப்பாளர்கள் பல்வேறு சிரமங்கள், சுமைகள், பின்னடைவுகளோடும் – முதலீட்டை இழக்கக் கூடிய அபாயத்துடனும்தான் துணிந்து – இந்தப் பணியில் இறங்குகிறார்கள். கலைஆர்வம்தான் அவர்களை இது போன்ற தயாரிப்புகளில் இறங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

அந்த வகையில் உள்ளூர் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட முன்வந்த தயாரிப்பாளர்கள் ரிதம் ஹைட்ஸ் நிறுவனத்தின் டி.சத்தியவர்மன் – ரெட் சுகர்கேன் மீடியா நிறுவனத்தின் விஜய் மோகன் ராவ் – டேக் ஃபைவ் கிரியேஷன் நிறுவனத்தின் சேகரன் – ஆகியோரின் கலை ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டத்தான் வேண்டும்.

கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வெளியில் – வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பாகக் காட்சியமைப்புகளைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் தீபன் எம்.விக்னேஷ். தமிழ் நாட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படங்களிலும், பல கோலிவுட் படங்களிலும் துணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இயக்குநரின் படைப்பில் காணமுடிகிறது.

பிசிறில்லாமல் நகரும் திரைக்கதை. ஆங்காங்கே எதிர்பாராத சமயங்களில் திடீரென வெடிக்கும் நகைச்சுவைச் சிதறல்கள், காதலன்-காதலி, கணவன்- மனைவி உறவுச் சிக்கல்களை, போரடிக்காமல் – கதையோட்டத்திற்கு இடையூறு விளைவிக்காமல்  – கொண்டு சென்றிருக்கும் இலாவகம் – ஆகியவற்றுக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

உதாரணமாக, விவாகரத்து குறித்து பெண் வழக்கறிஞர் ஒருவரிடம், கதாநாயகி கீதா நேர்காணல் எடுக்கும் காட்சி தொடங்கும்போது படம் பார்ப்பவர்களுக்கு தொய்வாகத் தெரியலாம். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் நேர்காணலோடு, கதாநாயகன் – கதாநாயகி பற்றிய சம்பவங்களையும் காட்டி படத்தின் அந்தப் பகுதியையும் சுவாரசியமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு

திரைக்கதையிலும், இயக்கத்திலும் இயக்குநர் கவனம் செலுத்தி படத்தை செதுக்கியிருக்கும் அதே வேளையில் அவருக்குப் பெருமளவில் கைகொடுத்திருப்பது படத்தில் நடித்திருக்கும் முக்கியக் கலைஞர்களின் பங்களிப்பு.

கதாநாயகன் இர்பான் சைனி இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். முகபாவங்களில் கோபத்தையும், பயத்தையும், நடுக்கத்தையும் நன்கு காட்டியிருக்கிறார். கதாநாயகி கவிதா சின்னையா நடிப்பிலும் குறையில்லை.

ஆனால், படத்தைத் தங்களின் நடிப்பால் தெறிக்க விடுபவர்கள் விகடகவி மகேனும், குபேன் மகாதேவனும்! அவர்கள் வரும் காட்சிகளில் திரையரங்கும் அதிர்கிறது. அவர்களும் அதற்கேற்ப தங்களின் உடல்மொழியால் காட்சிகளை நன்கு மெருகேற்றியிருக்கிறார்கள்.

கதாநாயகனின் மாமன் பையனாக வரும் யுவராஜூம் வழக்கத்திற்கு மாறான வில்லத்தனத்தைக் காட்டிக் கவர்கிறார்.

சிறந்த பின்னணி இசை – பாடல்கள்

படத்திற்கு பலம் சேர்க்கும் மற்றொரு அம்சம் பின்னணி இசை. சில சமயங்களில் பரபரப்புடன் நகரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசையும் விறுவிறுப்புடன் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

இரண்டு பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. பீனிக்ஸ் தாசன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

என் செல்லக் குட்டி பாடல் வழக்கமான தமிழ்நாட்டு ரக காதல் பாடலாக ஒலிக்க – மற்றொரு பாடலான ‘கவிதையே நீ பிரிவதேனடி’ அழகிய இலக்கிய நயமான வரிகளால் கவர்கிறது. இந்தப் பாடலை தமிழ் நாட்டின் சாம் விஷால், அமினா ரஃபிக் பாடியிருக்கின்றனர்.

படத்தின் பலவீனங்கள்

படத்தின் பலவீனங்கள், குறைகள் என சிலவற்றை விமர்சனத்துக்காகச் சுட்டிக் காட்டலாம். ஆனால், உள்ளூரிலேயே தமிழ்ப் படம் எடுக்க வேண்டும் – அதற்கென ஒரு சந்தையை உருவாக்க வேண்டும் – என படம் எடுத்தவர்களும், படத்தில் பங்கெடுத்திருக்கும் கலைஞர்களின் உழைப்பையும், கடுமையான முயற்சியையும் பார்க்கும்போது, அந்தக் குறைகள் பெரிதாகத் தெரியவில்லை.

பல தமிழ் நாட்டுப் படங்களை விட சிறப்பாகவே அமைந்திருப்பதால் திரையரங்குக்கு சென்று பார்த்தால் கண்டிப்பாக ஏமாற்றம் அடைய மாட்டீர்கள். உள்ளூர் படங்களுக்கும், கலையுலக வளர்ச்சிக்கும் உங்கள் ஆதரவை வழங்கியதாகவும் இருக்கும்.

‘பரவாயில்லையே! உள்ளூர் தமிழ்ப் படம் கூட தரத்தில் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதே’ என்ற பாராட்டு மொழிதான் உங்களின் வாயில் இருந்து வரும்!

-இரா.முத்தரசன்