Home Photo News சிம்பாங் ரெங்கம் : மீண்டும் வெல்வாரா மஸ்லீ மாலிக்? அவரைத் தோற்கடிப்பாரா ஹாஸ்னி முகமட்?

சிம்பாங் ரெங்கம் : மீண்டும் வெல்வாரா மஸ்லீ மாலிக்? அவரைத் தோற்கடிப்பாரா ஹாஸ்னி முகமட்?

388
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் பரபரப்பான – அனல் பறக்கும் பிரச்சாரம் – நடைபெறும் தொகுதிகளில் ஒன்று சிம்பாங் ரெங்கம். முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மீண்டும் இந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள பிகேஆர் வேட்பாளராக பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மோதுபவர் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட். அந்தத் தொகுதியின் நிலவரம் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்) 

  • கைதவறிய மந்திரி பெசார் பதவிக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராவாரா ஹாஸ்னி முகமட்?
  • 2-வது தவணையிலும் வென்று சாதனை படைப்பாரா மஸ்லீ மாலிக்?

2018-க்கு முன்புவரை சிம்பாங் ரெங்கம், ஊடகங்களில் அடிக்கடி அடிபட்டதற்குக் காரணம் அங்கிருந்த சிறைச்சாலை. குண்டர் கும்பல்களில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகள் போன்றவர்களை இரண்டாண்டுகளுக்கு தடுத்து வைத்துப் புனரமைக்கும் சிறைச்சாலையால் பிரபலமானது இந்த நகர்.

2018-இல் வேறொரு காரணத்திற்காகப் பிரபலமானது சிம்பாங் ரெங்கம். அந்த ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள், அரசியல் பார்வையாளர்களை சிம்பாங் ரெங்கம் நோக்கி ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது. தேசிய முன்னணி ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்று வந்த சிம்பாங் ரெங்கம் தொகுதியில் மஸ்லீ மாலிக் என்ற பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். ஜோகூரை முதன்மை மாநிலமாக முன்னிறுத்தி பக்காத்தான் ஹாரப்பான் மேற்கொண்ட அதிரடிப் பிரச்சாரத்தால் ஜோகூர் மாநில அரசாங்கமே கைமாறியது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி 2018 பொதுத் தேர்தலில் ஜோகூரில் இழந்த பல நாடாளுமன்றத் தொகுதிகளில் சிம்பாங் ரெங்கமும் ஒன்று.

3,475 வாக்குகள் பெரும்பான்மையில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் மஸ்லீ மாலிக். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கான்-தேசிய முன்னணி வேட்பாளர் தோல்வியடைந்தார்.

பாஸ் கட்சி வேட்பாளர் 2,983 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

மஸ்லீக்கு சவால் விடும் வேட்பாளர் முன்னாள் மந்திரிபெசார் ஹாஸ்னி முகமட்

கெராக்கான், 2018 தோல்வியைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து வெளியேறியது. அதனால் இந்த முறை இந்தத் தொகுதி அம்னோவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 60 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பதால், அம்னோ இந்தத் தொகுதியை மீண்டும் வெற்றி கொள்ள – வலிமை வாய்ந்த வேட்பாளராகக் கருதப்படும் முன்னாள் மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட்டை இங்கு களமிறக்கியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர் ஹாஸ்னி முகமட். ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களே அவரை முன்னிருத்தித்தான் – அவரின் சாதனைகளின் அடிப்படையில்தான் –  நடத்தப்பட்டன. இப்போது பிரபலமாகியிருக்கும் ‘போஸ்டர் போய்’ – அதாவது பதாகை நாயகன் – என்ற சொற்றொடரே மலேசிய அரசியலில் அவரால்தான் உருவானது.

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணியின் போஸ்டர் போயாக முன்னிருத்தப்படுபவர் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றாலும் ஹாஸ்னிக்கு மீண்டும் மந்திரி பெசாராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜோகூர் அரண்மனை அரசியல் எனக் கூறப்பட்டதால் யாரும் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. ஹாஸ்னிக்கு மாற்றாக ஓன் ஹாஃபிஸ் காஸி புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

அப்போது முதலே ஹாஸ்னி முகமட் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என அம்னோ தலைவர்கள் கோடி காட்டினர். எந்தத் தொகுதி என்ற மர்மம் வேட்புமனுத் தாக்கலன்று விலகியது.

சிம்பாங் ரெங்கம் தொகுதிக்கான அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியில் குதித்திருக்கிறார் ஹாஸ்னி முகமட்.

4 முனைப் போட்டியில் வெல்லப் போவது யார்?

பெர்சாத்து கட்சியின் வழி 2018-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மஸ்லீ மாலிக், தொடர்ந்து கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக் காலத்தில் சில சர்ச்சைகள் எழுந்தன. அதன் காரணமாக அவர் கல்வி அமைச்சராகப் பதவி விலகவும் நேர்ந்தது. பெர்சாத்து, அம்னோவுடன் இணைந்து ஷெராட்டன் நகர்வு மூலம் மத்திய அரசாங்கத்தை அமைத்தபோது – அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார் மஸ்லீ மாலிக். பிகேஆர் கட்சியில் இணைந்தார்.

இணைந்த சொற்ப காலத்திலேயே இந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவராக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

மீண்டும் அவருக்கு சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்தைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தேசிய முன்னணி சார்பில் ஹாஸ்னி முகமட் களமிறங்க – பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ஃபாஸ்ருல் காமாட் போட்டியிடுகிறார். துன் மகாதீரின் பெஜூவாங் கட்சி சார்பில் கமால் என்பவர் போட்டியிடுகிறார்.

59,033 வாக்காளர்களைக் கொண்ட புறநகர் தொகுதி சிம்பாங் ரெங்கம். 2018 கணக்கெடுப்பின்படி 60 விழுக்காட்டு மலாய் வாக்காளர்கள், 31 விழுக்காட்டு சீனர்கள் 9 விழுக்காட்டு இந்தியர்களைக் கொண்டது இந்தத் தொகுதி.

மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எல்லாத் தொகுதிகளிலும் நீடிக்கும் சிக்கல் சிம்பாங் ரெங்கத்திலும் எதிரொலிக்கிறது.

மலாய் வாக்குகள் 3 அணிகளாகப் பிளவுபட இதனால் எந்த வேட்பாளருக்குப் பாதிப்பு அதிகம் என்பதுதான் யாருக்கும் விளங்காத கேள்வி. பொதுத் தேர்தல் முடிவுகள்தான் விடை தரும்.

பெஜூவாங், பெரிக்காத்தான் வேட்பாளர்கள் இருவரும் அவ்வளவு பிரபலமில்லை. இருந்தாலும், பாஸ் கட்சியின் ஆதரவு, ஜோகூர் மாநிலத்துக்காரரான முஹிடின் யாசினுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு – ஆகியவற்றின் காரணமாக, பெரிக்காத்தான் வேட்பாளர் கணிசமான வாக்குகளைத் திசை திருப்புவார் என நம்பலாம்.

சீன, இந்திய வாக்குகளின் ஆதரவு பெரும்பாலும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியை நோக்கி திரும்புகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.

அதன்படி பார்த்தால் ஏற்கனவே பரிச்சயமான தொகுதி என்ற முறையிலும், இரண்டாவது தவணைக்கும் போட்டியிடுகிறார் என்பதாலும் மஸ்லீ மாலிக்கிற்கு கூடுதல் வாய்ப்பு இருக்கலாம்.

ஆனாலும், ஹாஸ்னி முகமட்டையும் குறைத்து மதிப்பிட முடியாது. முன்னாள் மந்திரி பெசார். எப்போதும் புன்னகை தவழும் மலர்ந்த முகத்துக்குச் சொந்தக்காரர். ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தாதவர். அவருக்கு இருக்கும் ஒரே பின்னடைவு இது அவருக்குப் புதிய தொகுதி என்பதுதான். இருந்தாலும், முன்னாள் மந்திரி பெசார்  என்ற அனுபவத்தின் மூலமும், அம்னோவின் வலிமை வாய்ந்த தேர்தல் இயந்திரத்தின் மூலமும் அவர் இந்தத் தொகுதியில் அதிரடி வெற்றி பெற்றாலும ஆச்சரியப்படுவதற்கில்லை.

சட்டமன்றத் தொகுதிகளை அம்னோ வென்றது – தோல்வி கண்ட மஸ்லீ மாலிக்

ஜோகூர் மாநில அரசாங்கம் அம்னோவின் கைப்பிடியில் இருப்பது ஹாஸ்னிக்கு இருக்கும் இன்னொரு கூடுதல் பலம். ஆனால், ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 54.92 விழுக்காட்டினர்தான் வாக்களித்தனர் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

இந்த முறை வாக்களிப்பு விழுக்காடு 70 விழுக்காட்டைத் தாண்டும் என்பதால் கூடுதல் வாக்குகள் எப்படிப் பிளவுபடும் என்பதும் புரியாத புதிர்.

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் 2 தொகுதிகள் மாச்சாப், லாயாங் லாயாங் ஆகும். இந்த 2 தொகுதிகளையும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோ வெற்றி கொண்டது. மாச்சாப் தொகுதியில் வெற்றி பெற்ற ஓன் ஹாஃபிஸ்தான் இப்போது மந்திரி பெசாராக இருப்பவர். இதுவும் ஹாஸ்னிக்கு வாய்த்திருக்கும் இன்னொரு பலம்.

மற்றொரு சட்டமன்றத் தொகுதியான லாயாங் லாயாங் தொகுதியில் போட்டியிட்டு மஸ்லீ மாலிக் தோல்வி கண்டார். இங்கேயும் அம்னோவே வெற்றி பெற்றது. இவையெல்லாம் ஹாஸ்னிக்கு இருக்கும் சாதகங்கள்.

சிம்பாங் ரெங்கத்தில் மஸ்லீ – ஹாஸ்னி இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறப் போகிறார்கள்.

ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் விழுக்காட்டினர் எவ்வளவு? – மலாய் வாக்குகளின் பிளவால் யார் அந்த வாக்குகளை அதிக அளவில் ஈர்க்க முடியும் – சீன, இந்திய வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு எந்தக் கூட்டணி பக்கம் சாயும்? – என்பது போன்ற பல அம்சங்களுக்கான கேள்விகளில் இங்கு போட்டியிடும் மஸ்லீ மாலிக்-ஹாஸ்னி முகமட் இருவரில் ஒருவரின் வெற்றி ஊசலாடுகிறது.

– இரா.முத்தரசன்