Home Photo News வெல்லப் போவது தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா? – சாதகங்கள், பாதகங்கள்!

வெல்லப் போவது தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா? – சாதகங்கள், பாதகங்கள்!

496
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் வெல்லப் போவது தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா? இரண்டு கூட்டணிகளில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கும் சாத்தியம் உண்டு என்ற நிலையில் அந்தக் கூட்டணிகளுக்கு இருக்கும் சாதகங்கள், பாதகங்கள் குறித்து விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

  • வேட்பாளர்கள் முகங்கள் மறைந்து, கூட்டணி சின்னங்களே வாக்காளர்கள் மனங்களில்!
  • அடுத்த பிரதமர் யார்? அடுத்த அரசாங்கத்தை எந்தக் கூட்டணி அமைக்க வேண்டும்? என்பதே எங்கும் பேச்சு!
  • பிரதமர் யார் என்ற குழப்பம்! தேசிய முன்னணியின் முதன்மை பலவீனம்!

வாக்களிக்க – அதுவும் யாருக்கு என்பதை முடிவெடுக்க – அல்லது ஏற்கனவே எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள – இன்னும் ஒரே நாள்தான் எஞ்சியிருக்கிறது!

இந்நிலையில் தேசிய முன்னணி அல்லது நம்பிக்கைக் கூட்டணி – இரண்டில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

#TamilSchoolmychoice

வெற்றியடைய அந்த இரண்டுக் கூட்டணிகளுக்கு இருக்கும் சாதகங்கள் என்ன? அதே வேளையில் அந்தக் கூட்டணிகள் தோல்வியடைவதற்கான பாதக அம்சங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்!

அதற்கு முன்னால் இந்தப் பொதுத் தேர்தல் குறித்த சில அரசியல் அம்சங்கள்!

யார் பிரதமர்? அடையாளம் காட்டும் குழப்பத்தில் தேசிய முன்னணி!

வழக்கமாக தேசிய முன்னணி பதாகைகளில் ஒரு தொகுதியின் வேட்பாளர் படமும் சின்னமும் இருக்கும். பல இடங்களில் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் படமும் வைக்கப்பட்டிருக்கும். 2018 பொதுத் தேர்தலில் கூட நஜிப்பின் படங்கள் கொண்ட பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டன. 1எம்டிபி ஊழல்கள் காரணமாக எதிர்ப்பலைகள் இருக்கலாம் என்பதால் குறைந்த அளவிலேயே நஜிப் பதாகைகள் அப்போது வைக்கப்பட்டன.

ஆனால் இப்போதோ நிலைமை முற்றிலும் வேறு! எங்கு பார்த்தாலும் தேசிய முன்னணியின் வேட்பாளர் படங்களே காணப்படுகின்றன. ஓரிடத்தில் கூட தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் படம் கொண்ட பதாகையைக் காண முடியவில்லை.

எனவே, தங்களின் தலைவர் யார்? எங்களை வழிநடத்தப் போகும் அரசாங்கத் தலைவர் யார்? என்பதைக் கூட வாக்காளர்களுக்கு எடுத்துக் காட்ட முடியாத பலவீன நிலையில் தேசிய முன்னணி இருக்கிறது.

தேசிய முன்னணி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் இஸ்மாயில் சாப்ரிதான் என அம்னோ தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஓரிடத்தில் கூட அதற்கான பதாகையை தேசிய முன்னணி வைக்கவில்லை. எந்த தேசிய முன்னணி வேட்பாளரும் இஸ்மாயில் சாப்ரியுடன் இணைந்திருக்கும் பதாகையை வைக்கவில்லை. உண்மையிலேயே அம்னோவினர் இஸ்மாயில் சாப்ரியைத்தான் பிரதமர் வேட்பாளராகக் கருதினால் அதற்கான பதாகை ஒன்று கூடவா உருவாக்க முடியாது?

எனவேதான், தேசிய முன்னணி வென்றால் சாஹிட்தான் அடுத்த பிரதமர் என்ற பக்காத்தான் பிரச்சாரம் வாக்காளர்களிடையே எடுபட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் பரவலாக அதற்கான காணொலிகள் அதிகமாகப் பகிரப்படுகின்றன.

தேசிய முன்னணி வெற்றி பெற்றாலும், சாஹிட் ஊழல் வழக்கு காரணமாக ஒதுங்கிக் கொண்டால், அவருக்குப் பதிலாக கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் பிரதமராவார் என்பதே மக்களிடையே பேசப்படும் இரண்டாவது தேர்வாக இருக்கிறது.

“அடுத்த பிரதமர் நானாகக் கூட இருக்கலாம். அது மாமன்னரைப் பொறுத்தது” என முகமட் ஹாசான் கிண்டலாகத் தெரிவித்ததாகவும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இஸ்மாயில் சாப்ரியை அடுத்த பிரதமராக சாஹிட்டும், முகமட் ஹாசானும் ஒப்புக் கொண்டு முன்மொழிவார்கள் என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடம் பேசும்போது காண முடியவில்லை.

சில அம்னோ தலைவர்கள், பெரும்பான்மை அம்னோ தொகுதிகள் இஸ்மாயில் சாப்ரிதான் அடுத்த பிரதமர் என முன்மொழிந்திருப்பதால் அவரே அடுத்த பிரதமர் எனப் புரியாமல் வாதிடுகிறார்கள். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவரே – மாமன்னரின் அங்கீகாரத்துடன் – பிரதமராக முடியும். இந்தத் தேர்வில் அம்னோ என்ற கட்சியின் முடிவு எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளப்படாது.

அன்வாரே பிரதமர் என்ற முழக்கம்!

ஆனால், பக்காத்தான் கூட்டணியின் அணுகுமுறையோ முற்றிலும் வேறாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அன்வார்தான் அடுத்த பிரதமர் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன.

அதற்கேற்ற வகையில் பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மிகத் தெளிவான – பக்காத்தான் தலைவர்களிடையே குழப்பமில்லாத – இந்த முடிவால், நாடு தழுவிய அன்வார் ஆதரவு வாக்காளர்கள், அவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம் என்ற முடிவை எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பக்காத்தான் வேட்பாளர்களும், தாங்களும் அன்வாரும் இணைந்திருக்கும் பதாகைகளைப் போட்டியிடும் தொகுதிகளில் அதிக அளவில் வைத்திருக்கிறார்கள்.

நடுநிலை வாக்காளர்களும் – யாருக்கு வாக்களிப்பது என இதுவரை முடிவு செய்யாத வாக்காளர்களும் – அன்வார் பிரதமராவதற்கு வாக்களிப்பது என முடிவு செய்தால் அதற்கான வாக்குகள் பக்காத்தான் கூட்டணியை நோக்கிச் செல்லும்.

இதற்கான சமீபத்திய உதாரணம் – 70 மலாய் பேராசியர்களைக் கொண்ட குழு அன்வாரை அடுத்த பிரதமராக ஆதரிக்கிறோம் என அறிவித்து – அதற்கான காரணங்களையும் தெரிவித்திருப்பதுதான்!

வாக்காளர்களின் மனங்களில் கூட்டணி சின்னங்களே நிறைந்திருக்கின்றன – வேட்பாளர்கள் முகமல்ல!

கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் – மாற்றத்தைக் கொண்டு வருவோம் – என்பதே பிரச்சாரமாக இருந்தது. இந்த முறையோ, ஒருமுறை ஆட்சி மாற்றம் நடந்து விட்ட காரணத்தால், மக்கள் தயங்காமல், துணிச்சலுடன் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் எனப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அதே வேளையில் யார் பிரதமராக வேண்டும் என்ற விவாதங்களும் மக்கள் மத்தியில் பிரதானமாக விவாதிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, வாக்காளர்கள் மத்தியில் தங்களின் தொகுதியில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட – எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – அதன் மூலம் யார் பிரதமராக வர முடியும்? – என்ற சிந்தனையே அவர்களை ஆக்கிரமித்திருப்பதுபோல் தெரிகிறது.

தேசிய முன்னணியின் சாதகங்கள் – பாதகங்கள்

மேற்குறிப்பிட்ட விவகாரங்களை வைத்துப் பார்க்கும்போது யார் பிரதமர் என்பதில் குழப்பம் – சாஹிட் பிரதமராகி விடலாம் என ஏற்படும் அச்சம் – ஆகியவை தேசிய முன்னணிக்கு எதிரான – பாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. கைரி ஜமாலுடின் போன்ற அம்னோ தலைவர்கள் சாஹிட்டை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டுகளால் நாடு தழுவிய அளவில் அம்னோவுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் நல உதவித் திட்டத்திற்கான தொகையை பருவமழையைக் காரணம் காட்டி, முன்கூட்டியே வழங்கியிருப்பது – அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் – இரண்டு நாள் விடுமுறை – டோல் என்னும் சாலைக் கட்டணங்களில் இருந்து விலக்கு – போன்ற அறிவிப்புகளால் தேசிய முன்னணியின் தோற்றம் மக்களிடையே சற்றே உயர்ந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் வாக்குகளாக மாற இவை உதவுமா?

மலாய் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சி – என்ற முறையில் அம்னோவை நாம் விட்டு விடக் கூடாது என பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் சிந்திக்கிறார்கள் என்பது இன்னொரு ஆய்வு. இதுவும் தேசிய முன்னணிக்கு சாதகமான அம்சமே!

பிரதமர் இஸ்மாயில் சாப்ரி மீது எதிர்மறை விமர்சனங்களோ – ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை – என்பது தேசிய முன்னணிக்கு இருக்கும் இன்னொரு சாதக அம்சம். அவரின் மலேசியக் குடும்பம் சித்தாந்தமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

நம்பிக்கைக் கூட்டணிக்கான சாதக – பாதக அம்சங்கள்

நம்பிக்கைக் கூட்டணிக்கு இருக்கும் பலங்களாக 4 முக்கிய அம்சங்களைக் குறிப்பிடலாம்.

முதலாவது, அன்வாரைப் பிரதமராக முன்னிருத்தியிருப்பது! இதன் காரணமாக, அன்வார் ஆதரவாளர்கள் குறிப்பாக மலாய் வாக்காளர்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு தருவோமே என்ற எண்ணத்தில் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது பலம், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லியின் ஆளுமை – அவருக்கு அரசியல் சார்புகளைக் கடந்து கிடைத்து வரும் ஆதரவு. நடுநிலை வாக்காளர்கள் மத்தியிலும், ஊழலற்ற, நேர்மையான ஆட்சிக்குப் போராடுபவர்கள் மத்தியிலும் அவருக்கிருக்கும் செல்வாக்கு பல தொகுதிகளில் பக்காத்தான் ஆதரவு வாக்குகளாக மாறக் கூடிய வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது பலம், மலாய்-முஸ்லீம் அல்லாத சீன, இந்திய வாக்காளர்களில் பெரும்பாலோர் – பல இன அரசியலை முன்னெடுக்கும் அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்கே தங்களின் ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.

நான்காவது பலம் மூடா கட்சியின் சேர்க்கை! மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கும் அவரின் மூடா கட்சிக்கும் இளைஞர்களிடையே பரவலான ஆதரவு இருப்பதை நாம் மறுக்க முடியாது.  அதுமட்டுமின்றி களத்தில் இறங்கி, நவீன முறையில் சமூக ஊடகங்களின் துணையோடு அவர்கள் வாக்காளர்களை அணுகுவதால் – அத்தகைய முயற்சிகள் பக்காத்தானுக்கு ஆதரவான வாக்குகளாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

பக்காத்தான் கூட்டணியின் முக்கிய பாதக அம்சம் – ஜசெக அவர்களுடன் இணைந்திருப்பதால் அவர்களுக்கு எதிராக, மலாய் வாக்குகள் திரும்பலாம் என்பதாகும். இதை அம்னோ, பாஸ் தீவிரப் பிரச்சாரமாக முன்னெடுக்கின்றன. பிரதமரே ஒரு கூட்டத்தில் “அன்வாருக்கான ஓர் ஓட்டு – ஜசெகவுக்கான ஓர் ஓட்டு” என முழங்கியிருக்கிறார்.

எந்த அளவுக்கு ஜசெகவின் இணைப்பால் நம்பிக்கைக் கூட்டணிக்கான மலாய் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்பதை பொதுத் தேர்தல் முடிவுகள்தான் காட்டும்!

மேற்கு மலேசியாவில் 100 தொகுதிகளில் வெற்றி பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்

பாடாங் செராய் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கருப்பையாவின் மறைவைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் மட்டும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

மேற்கு மலேசியாவின் 165 தொகுதிகளில் எந்தக் கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளைப் பெற முடியுமோ  – அந்தக் கூட்டணியே ஆட்சியை அமைக்கும் வலிமையைப் பெறும்! சபா, சரவாக் கட்சிகள் சில அந்தக் கூட்டணியோடு இணைந்து கொள்ளும்.

உதாரணமாக, தேசிய முன்னணி அல்லது நம்பிக்கைக் கூட்டணி 100 தொகுதிகளை மேற்கு மலேசியாவில் கைப்பற்றினால் எஞ்சிய 65 தொகுதிகளை மற்ற இரு கூட்டணிகளும் பெறும். பாஸ் இடம் பெற்றிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மேற்கு மலேசியாவில் சுமார் 20 முதல் 30 இடங்களுக்குள் வெற்றி பெற முடியும் எனக் கணிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட சாதக – பாதக அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது 90 முதல் 100 வரையிலான மேற்கு மலேசிய நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கப் போவது யார்?

தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா?

– இரா.முத்தரசன்