Home நாடு பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை

பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை

555
0
SHARE
Ad
வான் ரோஸ்டி

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைக்க ஆதரவு தர சத்தியப் பிரமாண ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் பெரிக்காத்தான் கூட்டணியும் தேசிய முன்னணியுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கின்றது.

பகாங் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசார் வான் ரோஸ்டி இது குறித்து எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

பகாங் சட்டமன்றத் தேர்தல்களில் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.

17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற – 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய முன்னணி – அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த பகாங்கில் முதன் முறையாக தேசிய முன்னணி தோல்வி கண்டிருக்கிறது.

பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து 42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் அரசாங்கத்தில் எந்தக் கூட்டணியுமே பெரும்பான்மை பெறவில்லை.

தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நாளை நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.