Home நாடு சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது

சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது

576
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக  – ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்), கைருல் ஃபிர்டாவ்ஸ் அக்பார் கான் (பத்து சாப்பி), ஜொனாதன் யாசின் (ரானாவ்), மாட் பாலி மூசா (சிபித்தாங்) ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்கள்தாம்  அவர்கள்.

தேர்தல் முடிந்ததும் அவர்கள் நால்வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்தனர். சபா மாநிலத்தின் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக இணைந்து ஜிஆர்எஸ் கூட்டணியின் மூலம் தனித்து இயங்கவிருப்பதாக அந்த சமயத்தில் ஜிஆர்எஸ் கூட்டணியின் தலைவர் ஹாஜிஜி நூர் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

பெர்சத்து கட்சி, ஜிஆர்எஸ் கூட்டணியில் ஓர் அங்கம் என்றும் சர்ச்சைக்குரிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து மூலமாகத்தான் ஜிஆர்எஸ் என்ற கூட்டணியில் இடம்பெற்றார்கள் என்றும் இதன் தொடர்பில் ஆட்சேப மனு நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜொகாரி அப்துலிடம் பெர்சாத்து கட்சி சமர்ப்பித்தது.

இந்த நால்வரும் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் என்றும் அவர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி இருப்பதால் அவர்கள் நால்வரின் நாடாளுமன்றத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்க வேண்டும் என பெர்சத்து கட்சி சார்பில் அதன் சபா மாநிலத் தலைவர் ரொனால்டு கியாண்டி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி கடிதம் ஒன்றை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். கியாண்டி, பெலுரான் (சபா) நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

இந்த விவகாரத்தில் தன் முடிவை ஜனவரி 16ஆம் தேதி நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜொகாரி அப்துல் தெரிவித்தார்.

அதன்படி அந்த நால்வரின் கட்சி மாற்றத்தால் அவர்கள் தங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கத் தேவையில்லை என்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கட்டமைப்புக்குள் அவர்களின் விவகாரம் வரவில்லை என்றும் ஜொகாரி அறிவித்தார்.

“நீதிமன்றம் செல்வோம்” டான்ஸ்ரீ மொஹிடின் யாசின்

ஜொகாரியின் முடிவுக்கும் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியிருக்கிறார் பெர்சத்து கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.

இதன் தொடர்பில் தாங்கள் நீதிமன்றம் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். ஜிஆர்எஸ் கூட்டணியைத் தோற்றுவித்த கட்சிகளுள் ஒன்றுதான் பெர்சத்து. எனவே பெர்சத்து ஒரு கட்சி என்றும் ஜிஆர்எஸ் இன்னொரு கட்சி என்றும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் முஹிடின் வாதிட்டிருக்கிறார்.

கட்சித் தாவல் தடைச் சட்டம் மீதான முதல் நீதிமன்ற வழக்காக இந்த 4 சபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவகாரம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.