சென்னை : நடிகர் மயில்சாமியின் அகால மரணம் திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற 57 வயதான அவர் எம்ஜிஆரின் பக்தராகத் திகழ்ந்தார். அதிமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.
சனிக்கிழமையன்று (பிப்ரவரி 18) மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த வழிபாட்டில் டிரம்ஸ் சிவமணியும் கலந்து கொண்டார். வீட்டிற்கு திரும்பும் வழியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலை 4.00 மணிக்கு மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
வீட்டிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட, குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.
மயில்சாமியின் நல்லுடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினரும், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமியில் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர். வடபழனி ஏவிஎம் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மயில்சாமியின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.