Home நாடு 5ஆவது ஆசியான் – இந்தியா வணிக உச்சநிலை மாநாடு

5ஆவது ஆசியான் – இந்தியா வணிக உச்சநிலை மாநாடு

805
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையிலான உச்சநிலை வணிக மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 6 மார்ச் 2023-இல் நடைபெறவிருக்கிறது.

ஆசியான் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நல்லிணக்கம், தூதரக உறவுகள், வணிகப் பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த 5ஆவது வணிக உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் தங்குவிடுதியில் நடைபெறவிருக்கிறது.

“வியூக ரீதியிலான வணிகப் பங்காளித்துவம் உருவாக ஆசியான் – இந்தியா பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், முன்னெடுத்தல்” என்ற சுலோகத்தின் அடிப்படையில் இந்த வணிக உச்ச நிலை மாநாடு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இந்த விவரங்களை நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி, ஆசியான் – இந்தியா வணிக மன்றத்தின் இணைத் தலைவர்  டத்தோ ரமேஷ் கோடம்மால் இருவரும் கூட்டாகத்  தெரிவித்தனர்.

இந்த மாநாடு இரு நாடுகளுக்கு இடையிலும் வளர்ந்துவரும் மின்னிலக்கப் பொருளாதாரத்தை (டிஜிட்டல்) ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டிருக்கும். மலேசியாவின் சார்பில் தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபாமி ஃபட்சில், அனைத்துலக வணிக, தொழில்துறை துணையமைச்சர் லியூ சின் தோங், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹிஷாம் இஷாக் ஆகியோர் கலந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆசியான் நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளின் வணிகப் பிரமுகர்கள் கலந்துகொள்வர். இந்தியாவின் சார்பில் மிகப்பெரிய வணிகக் குழு ஒன்று இந்த மாநாட்டில் பங்குபெறவிருக்கிறது. அந்தக் குழுவுக்கு இந்தியத் தொழில்துறைகளின் சம்மேளனத்தின் தலைவர் அருண் சாவ்லா தலைமையேற்பார்.

இந்திய வெளியுறவு அமைச்சின் துணையமைச்சரும் மற்ற முக்கிய அரசாங்க அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகப் பரிமாற்றத்தின் அளவு ஏப்ரல் 2021 தொடங்கி மார்ச் 2022 வரை 110 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.

இந்த வணிக உச்ங்நிலை மாநாடு இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நிலவிவரும் தூதரக உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவையும் சிறப்பு அங்கமாகக் கொண்டாடவிருக்கின்றது.

இதே மாநாட்டில் இந்தியாவின் மின்னியல் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மெய்நிகர் (Virtual) வழி முதன்மை உரையை நிகழ்த்துவார். மலேசியாவில் தற்போது 100க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்பதைக் கருத்தில்கொண்டு இந்த வணிக உச்ங்நிலை மாநாட்டில் இத்துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுடனும் ஆசியான் நாடுகளுடன் வணிகத் தொடர்புகள் கொண்ட வணிகர்கள் பெருமளவில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தியத் தூதர் பி.என். ரெட்டி தெரிவித்தார்.