கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 10-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது. நஜிப் துன் ரசாக்கிற்குப் பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பிரதமர் மொகிதின் ஆவார்.
தற்போது வகித்து வரும் பெர்சாத்து கட்சித் தலைவர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதா அல்லது தொடர்ந்து நீடிப்பதா என்பதை நாளை என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் பட்டியலைப் பார்த்தபின் முடிவு செய்வேன் என மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தில் சுமார் 7 மணிநேரம் மொகிதின் விசாரிக்கப்பட்டார். அவரிடம் இருந்து விளக்கங்கள் பெறப்பட்ட பின்னர் அவர் அனுப்பப்பட்டார். அங்கிருந்து கோம்பாக்கில் உள்ள பாஸ் கட்சி தலைமையகத்திற்கு அவர் இரவு 9.30 மணியளவில் வருகை தந்தார்.