(எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது மஇகா. அந்த முடிவு சரியா? போட்டியிடாதது மஇகாவின் வரலாற்றுப் பிழையாகலாம் என வாதிடுகிறார் இரா.முத்தரசன்)
* 1946 கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் மஇகா ஒதுங்கியதில்லை
*மசீசவுடன் கூட்டணி சேர்ந்து நம்மையும் அவர்களுடன் ஒப்பிடக் கூடாது
*அரசியல் பலமே இந்தியர்களின் பலம்! அதனைக் கைவிடக் கூடாது மஇகா?
*வாக்குகளின் – தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல! இறங்கி களமாடுவதே அரசியல்!
1952-ஆம் ஆண்டுதான் நம் நாட்டில் முதன் முதலில் ஜனநாயக அடிப்படையில் முனிசிபல் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலிலேயே மஇகாவின் தேசியத் தலைவர் கே.எல்.தேவாசர் மலாயா சுதந்திரக் கட்சியோடு இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார். 1946-ஆம் ஆண்டுதான் – 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொடங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் – நாட்டின் அந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் மஇகா போட்டியிட்டது.
அதன் பின்னர் நாட்டின் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் – எந்தக் காரணத்தைக் காட்டியும் – மஇகா போட்டியிடாமல் ஒதுங்கியதில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. ஆனால் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வோம் என எந்த மஇகா தலைமைத்துவமும் அறிவித்ததில்லை.
காரணம், தேர்தல் களம்தான் ஓர் அரசியல் கட்சிக்கு அழகு. எத்தனை வாக்குகள் பெறுகிறோம் – தொகுதிகள் பெறுகிறோம் என்பதல்ல அரசியல்! இறங்கிக் களமாடுகிறோம் என்பதுதான் அரசியல்!
1954-இல் அலையன்ஸ் என்னும் கூட்டணியில் அம்னோ-மசீசவுடன் இணைந்தது மஇகா. அடுத்த ஆண்டே 1955-இல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்கு பெற்றது. சுதந்திரம் கிடைத்த பின்னர் 1959-இல் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலிலும் மஇகா போட்டியிட்டு மத்திய அரசாங்கத்திலும் மாநில அரசாங்கங்களிலும் இடம் பெற்றது.
இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இப்போதுதான் – தானே முன்வந்து 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களிடம் போட்டியிட மாட்டோம் என மஇகா அறிவித்துள்ளது. கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையே இந்த முடிவினால் அதிருப்திகள் எழுந்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!
2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் மஇகாவுக்கு 3 தொகுதிகள் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளிலும் ஒவ்வொரு முறையும் மஇகா தோல்வியையே தழுவியது. பினாங்கு, பேராக் மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.
எனவே, எங்களுக்குரிய தொகுதிகள் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீம்புக்கு தொகுதிகளைப் பெற்றுவிட்டு, எல்லாவற்றிலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைவதற்கு பதிலாக – ஒரேயொரு தொகுதியைப் பெற்று – அதில் முழு மூச்சாகக் கவனம் செலுத்தி – சிறந்த, திறமையான வேட்பாளரை நிறுத்தி – வெல்வதுதான் இன்றைய சூழ்நிலையில் மஇகா செய்யக் கூடிய சரியான முடிவாக இருக்கும்.
அவ்வாறு செய்யாமல் – அறவே போட்டியிடாமல் ஒதுங்குவதும், இன்னும் 5 ஆண்டுகள் கழித்து வரக் கூடிய அடுத்த 16-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறோம் என்றும் – ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வோம் என்றும் – கூறுவது, மஇகா உறுப்பினர்களாலும் இந்திய சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத வறட்டு வாதமாகவே படுகிறது.
அப்படி மாநிலத்துக்கு ஒரு தொகுதி கூட தேசிய முன்னணி ஒதுக்கவில்லை என்றால் – அந்த முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டால் – அதைக் காரணமாக வைத்து மஇகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் – அதுவே மஇகாவின் சிறந்த முடிவாக இருக்கும். இந்திய சமூகமும் அதனை ஏற்றுக் கொள்ளும். கட்சி மீது அனுதாபமும் பிறக்கும். அதன் பின்னரே போட்டியிடவில்லை என ஒதுங்கிக் கொள்வது கட்சிக்கும் கௌரவமானதாக இருக்கும்.
அதை விடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னரே நாங்கள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறோம் என அறிவிப்பது மஇகா செய்யும் வரலாற்றுப் பிழையாக அமையும்.
எனவே, இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய மஇகா தலைமைத்துவமும் மத்திய செயற்குழுவும் முன்வர வேண்டும்.
போட்டியிடாமல் சாதிக்கப் போவது என்ன?
போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதால் இந்திய சமூகம் பிரதிநிதிக்கப்படாமல் பின்னடையப்போவதில்லை. இத்தனை ஆண்டுகளாக மஇகா இல்லாத வெற்றிடத்தை கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பிகேஆர், ஜசெக கட்சிகள் நிரப்பி வந்தன. அந்நிலைமை தொடரலாம்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக மஇகா, தனக்கென சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராவிட்டாலும் இந்த மாநிலங்களில் மஇகா ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கப்பட்டது. இப்போது அந்தத் தேவையையும் அரசியல் ஆற்றலையும் தானே விட்டுக் கொடுத்துவிட்டது.
சரி! மஇகா போட்டியிடாவிட்டால் என்னவாகும்?
சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் எல்லா மாநிலங்களிலும் (இந்தியர்கள் அதிகம் இல்லாத கிளந்தான், திரெங்கானு தவிர்த்து) பெரும் வெற்றி பெறுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கானப் பாராட்டு மழை பிரதமர் அன்வார் இப்ராகிமையும் ஒற்றுமை அரசாங்கத்தின் மற்ற கட்சிகளையும்தான் சென்றடையுமே தவிர, மஇகாவுக்கு யாரும் நன்றி கூறப் போவதில்லை.
அதே போல, ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் படுமோசமாக, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடம் தோல்வியடைகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும், பச்சை அலை வீசியது, மலாய் வாக்காளர்களின் ஆதரவில்லாமல் தோல்வி, என்றுதான் சுட்டிக் காட்டப்படுமே தவிர, மஇகா, மசீச, போட்டியிடாததால்தான் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் தோல்வியடைந்தார்கள் என எந்த ஆய்வும் கூறப்போவதில்லை.
மஇகா போட்டியிடாவிட்டாலும், ஏற்கனவே பெரிக்காத்தான் நேஷனலில் இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லாத அதிருப்தியில் இருக்கும் இந்திய வாக்காளர்கள், பக்காத்தானுக்கும், மற்ற தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும்தான் வாக்களிப்பார்கள். அப்படியே மஇகாவினர் சிலர் அதிருப்தி கொண்டு ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு வாக்களிக்காவிட்டால், அந்த எண்ணிக்கை சட்டமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகளில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தும் விழுக்காடாக இருக்காது.
எனவே, ஒற்றுமை அரசாங்கமோ, தேசிய முன்னணியோ தங்களை புறக்கணித்தது என்ற தோற்றத்தை முதலில் ஏற்படுத்தாமல் தாங்களே முன்வந்து போட்டியிடவில்லை என அறிவித்ததால் மஇகா முடிவு மீது இந்திய சமுதாயத்திற்கு எந்த அனுதாபமும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.
இப்படியாகத் தங்களைத் தேவையில்லாத ஓர் அரசியல் சக்தியாக மஇகாவே முன்வந்து அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
மசீசவுடன் நம்மை இணைக்க வேண்டாம் – ஒப்பிட வேண்டாம்
மசீசவும் இதேபோன்றதொரு முடிவை எடுத்தது என்பதை வைத்து மஇகா சரியான முடிவெடுத்திருக்கிறது எனக் கூறுவது தவறான கண்ணோட்டமாகும். சீன சமூகத்தைப் பிரதிநிதிக்க ஜசெக வேட்பாளர்கள் இருக்கிறார்கள். பிகேஆரிலும் சீன வேட்பாளர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே பெரும் நிதி வளத்தைக் கொண்டிருக்கும் கட்சி மசீச.
தமிழ்ப் பள்ளிகளில் கூரைகள் ஒழுகுகின்றன, மாணவர்கள் உட்காரும் நாற்காலிகள் உடைந்திருக்கின்றன என்பது போன்ற புலம்பல்கள் தொடங்கி, ஆலய கும்பாபிஷேகங்களுக்கு நிதி உதவி வேண்டும் என்ற கோரிக்கைகள், இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பது போன்ற வேண்டுகோள்கள் சீன சமூகத்தில் இல்லை. மசீச ஒதுங்கிக் கொண்டாலும் தங்களின் செல்வச் செழிப்பின் ஆதிக்கத்தினால் சீன சமூகம் தங்களைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையை எப்போதோ பெற்றுவிட்டது.
இந்திய சமூகம் அப்படியல்ல! நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு (ஜெராம் பாடாங்) லெட்சுமணன் மாணிக்கம் போல், மாநிலத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் மூலம், மாநில அளவிலும், அவர் பிரதிநிதிக்கும் சட்டமன்றத்திலும் இந்திய சமூகம் நிறைய பலன்களை அடையலாம். அதற்கான தேவைகளையும் இந்திய சமூகம் கொண்டிருக்கிறது.
காலம் கடந்து விடவில்லை.
மஇகா, மசீச ஒதுங்கிக் கொள்வதால், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களும் சற்று பின்னடைவைச் சந்திப்பார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் எனஅறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்திலும், பின்னர் பிரதமருடனான சந்திப்புக் கூட்டத்திலும் தங்களின் கோரிக்கைகளை வற்புறுத்தி அணுகுமுறையை மாற்றிக் கொண்டு மீண்டும் தேர்தல் களத்திற்கு மஇகா திரும்ப வேண்டும். இந்த வாய்ப்பை இழந்து விட்டால் பின்னர் மீண்டும் அதனை அடைவது என்பது கடினம்.
குறைந்தது மாநிலத்துக்கு ஒரு சட்டமன்றத்திலாவது போட்டியிட கண்டிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமரும், தேசிய முன்னணி தலைமைத்துவமும் வாய்ப்பு வழங்கினால் அதனை மஇகாவும் இன்றைய புதிய அரசியல் சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய சமுதாயத்தின் – மஇகாவினரின் எதிர்பார்ப்பு.
மாறாக, அறவே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் வரலாற்றுப் பிழையை மஇகா செய்யக் கூடாது,
அவ்வாறு மஇகாவுக்கு மாநிலத்துக்கு ஒரு தொகுதியாவது ஒதுக்க தேசிய முன்னணியோ, ஒற்றுமை அரசாங்கப் பிரதமர் அன்வார் இப்ராஹிமோ முன்வராவிட்டால் – மஇகாவுக்கு மதிப்பளிக்காவிட்டால் – அதன் பின்னர் போட்டியிட மாட்டோம் என்று கூறுவதுதான் மஇகாவுக்கும் கௌரவமாக இருக்கும்.
மாநிலத்துக்கு ஒரு தொகுதிகூட மஇகாவுக்குத் தரமாட்டோம் என தேசிய முன்னணியும் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமரும் கூறினால் அதன்பின்னர், இந்திய சமூகமும் தங்களின் அதிருப்திகளைக் காட்ட – ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிப்பர் – என உறுதியாக நம்பலாம்!