ஜோர்ஜ் டவுன் : கடந்த ஒரு தவணை ஜசெக சார்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சதீஸ் முனியாண்டி ஜசெகவில் இருந்து விலகி, அதே தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார்.
எனினும் பினாங்கைத் தொடர்ந்து வழிநடத்த காபந்து முதல்வர் சௌ கோன் இயோவை ஆதரிப்பதாக சதீஸ் உறுதியளித்தார்.
ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக்கிற்கு தனது பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கடந்த 15 ஆண்டுகளாக சேர்ந்து அரசியல் பணியாற்றிய ஜசெகவில் இருந்து விலகும் மிகக் கடினமான முடிவை சௌ கோன் இயோவுக்கும் தெரிவித்திருப்பதாக சதீஸ் மேலும் தெரிவித்தார்.
சதீஸ் சுயேட்சையாகப் போட்டியிடுவதால் ஜசெகவுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து ஒரு தலைவர் பினாங்கு மாநிலத்தின் சக்கரவர்த்தி போல நடந்து கொள்கிறார் எனவும் சாடினார் சதீஸ்.
எனினும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் சேரவும் மாட்டேன் அவர்களை ஆதரிக்கவும் மாட்டேன் எனவும் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.