சென்னை : தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்த நடைப் பயணத்தில் அதிமுக இணையவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை – அவரும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார் – என அண்ணாமலை பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது அதிமுக எடப்பாடி ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கருத்துக்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை டில்லி செல்கிறார். அங்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கிறார். தமிழக நிலவரங்களால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் 100 நாள் நடைப்பயணம் என அறிவித்து விட்டு 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அந்த நடைப்பயணத்தை இடையிலேயே நிறுத்தி விட்டு டில்லி செல்ல வேண்டிய அவசரம் என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
இதனால் அவரின் சந்திப்பைத் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக இனி முற்றாகப் புறக்கணிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் சின்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் எடப்பாடி பன்னீர் செல்வத்திற்குக் கிடைத்து விட்டதால் அவரின் தலைமையிலேயே நாடாளுமன்றத்தைச் சந்திக்கும் முடிவை பாஜக எடுக்கலாம்.
அமித்ஷா நேரடியாக வந்து இராமேஸ்வரத்தில் இருந்து அண்ணாமலையின் நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்ததால் அவர் பாஜக தமிழ் நாடு தலைவராக மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.