ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில துணை முதல்வர் விவகாரத்தில் தமிழருக்கான உரிமையை தமிழர்கள் கேட்பதை இனவாதம் – வெறித்தனம் என்பதா? என பினாங்கு மாநில சமூகத் தலைவர்களில் ஒருவரான மு.வீ.மதியழகன் கேள்வி எழுப்பினார்.
பினாங்கு தமிழர்நல நற்பணி மன்றத் தலைவரான மதியழகன், எம்ஜி.பண்டிதன் தலைமையில் பினாங்கு மாநிலத்தில் ஐபிஎஃப் கட்சியின் வழி தீவிர அரசியல் ஈடுபாடு காட்டியவரும் ஆவார்.
நியமனங்களை முதலமைச்சர்
மறு ஆய்வு செய்ய வேண்டும்
“சமீபத்தில் பினாங்கு மாநில 2-வது துணை முதலமைச்சர் தமது அலுவலகத்தில் பிரி மலேசியா டுடே (FMT) இணைய ஊடகத்திற்கு தந்த செய்தியில் ‘இனவாதம் வெறித்தனம்’ என்ற இரட்டைச் சொல்லை மாண்புமிகு ஜக்டீப் சிங் டியோ திரும்பப் பெற்றிட வேண்டும். அதுபோல் இனமானமற்ற சில இந்தியர்களது பேச்சும் எழுத்தும் முதுகெலும்பற்ற செயல் என்று வர்ணிப்பதைவிட வேறு வார்த்தைகள் இல்லை. யார் எதை எப்படி சொன்னாலும் பினாங்கு மாநிலத்து முதலமைச்சர் மாண்புமிகு சௌ கோன் இயோ செய்திட்ட நியமனங்கள் அரசியல் நோக்குடையதே. அதை மாநில அரசாங்கம் மறு ஆய்வு செய்தே ஆக வேண்டும்” என மதியழகன் விடுத்த அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.
“அவர்களுக்கென்றால் அது ரத்தம் தமிழர்களுக்கென்றால் அது தக்காளி சட்டினியா? பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சராய் ஓர் இந்திய வம்சாவளி வந்திட முடியுமா? நீங்கள் அமரர் கர்ப்பால் சிங் மகனாக இருந்தாலும் நடக்குமா? அதன் மீது உங்களால் கேள்வி எழுப்பிட முடியுமா? இன்றளவும் பழமையான பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அடிப்படையிலேயே – அதுவும் கோட்டா சிஸ்டம் என்ற நடைமுறை அடிப்படையிலேயே, நமது நாட்டின் மக்களாட்சி தத்துவமாக இருக்கிறது. பிறரது உரிமை மீது கேள்வி எழுப்புவது சட்டபடி குற்றமாகும். நாட்டின் 32-லட்ச இந்தியர்களில் அதிக பெருபான்மை 25-லட்ச தமிழர்கள் வாழும்போது அந்த தமிழரது உரிமைக்கு தமிழர்கள் போராடுவது வெறித்தனம் என்றால்? 1-ம் தரம், 2-ம் தரம், 3-ம் தரம் என வகைபடுத்தி தரம் பிரித்து வழி நடத்துவதற்கு பெயர் வெறித்தனமா? ஜனநாயகமா? சர்வாதிகாரமா? இதன் மீது கேள்வி எழுப்புவாரா நமது பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ஜகடீப் சிங் டியோ?” எனவும் மதியழகன் தன் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
பெரும்பான்மை என்பதால்தான்
சீன சமூகத்திற்கு முதலமைச்சர் பதவி
“அதே நேரத்தில் அதிக பெரும்பான்மை கொண்ட சீனர் சமூகத்துக்கு சீன வம்சாவளி முதலமைச்சரையும், 2-ம் நிலையில் மலாய்கார சமூகத்துக்கு மலாய் வம்சாவாளி துணை முதலமைச்சரையும், வழங்கி விட்டு, 3-வது இடத்தில் இந்தியருள் அதிக பெரும்பான்மை கொண்ட தமிழர் சமூகத்துக்கு தமிழரையே நியமிக்க வேண்டும் எனக் கேட்பது மட்டும் தேசிய குற்றமா? இது எந்த வகையில் நியாயம்?” என்றும் மதியழகன் சாடினார்.
“நாங்கள் ஜக்டீப் தந்தையான போராளி அமரர் கர்பால் சிங் மீதோ அவரது சேவையின் மீதோ கேள்வி எழுப்பவில்லை. அது எங்களின் நோக்கமும் கிடையாது. அவரைக் கொண்டு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நியமனப் பதவியே மாநில துணை முதலமைச்சர்- 2. அதை மறுப்பதற்கில்லை. அவரையே எதிர்த்து நீர் கட்சிக்கு காட் ஃபாதரா எனக் கேள்வி எழுப்பிய போதும் தமிழரை மாற்றி நினைக்காதவர் கர்ப்பால் சிங். காரணம் அது தமிழரது அடிப்படை உரிமை. ஏனென்றால் தமிழர்களது எழுச்சி பேரணியால் மட்டுமே பினாங்கை ஜசெகவால் கைப்பற்ற முடிந்தது. இதுவே நிதர்சனமான உண்மை” என்றும் மதியழகன் கூறினார்.
மன்மோகன் சிங் உதாரணம் பொருத்தமற்றது
“கர்ப்பால் சிங் காலத்தில்தான் தமிழருக்கு மட்டுமே வழங்கப் பட்ட பதவி என்பதை இன்றய மாநில துணை முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும். அது போல இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை உதாரணம் காட்டியது தேவையற்றது, ஏனெனில் அவரொரு பொம்மையாகவே செயலாற்றினார். இது உலகறிந்த தகவல். அதுபோல நீங்களும் இருக்க போகிறீர்களா? ” எனவும் மதியழகன் கேள்வி எழுப்பினார்.
“தமிழர்களது போராட்டம் தமிழர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதுவே. பினாங்கு மாநில துணை முதலைமைச்சராய் தமிழரொருவர் நியமனம் பெறவேண்டும் எனக் கோரிக்கை வைப்பது தேசியக் குற்றமா? ஜக்டீப் கூறிய வார்த்தைகளை அவர் திரும்பப் பெற்றிட வேண்டும். காரணம் நீங்களே உங்களை எதிர்த்து எங்களைப் போராட வைக்க வேண்டாம்” எனவும் மதியழகன் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.