Home நாடு ஜக்டீப் சிங் டியோ – “இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றுவேன்”

ஜக்டீப் சிங் டியோ – “இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றுவேன்”

228
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ, இந்தியர்கள், சிறுபான்மையினர் என்றில்லாமல் அனைத்து இனங்களுக்கும் தான் சேவையாற்ற கடப்பாடு கொண்டுள்ளதாக அறிவித்தார்.

பிரி மலேசியா டுடே (எஃப்.எம்.டி) இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜக்டீப் இந்த வாக்குறுதியை வழங்கினார்.

1906-ஆம் ஆண்டுக்கான இந்து அறப்பணி வாரிய நிர்வாகம் தொடர்பான சட்டத்தில் கூட இந்து என்ற வார்த்தை சீக்கியர்களையும் குறிக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“இந்தியாவும் மன்மோகன் சிங் என்ற சீக்கியப் பிரதமரைக் கொண்டிருந்தது. அவரைப் போல நானும் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொண்ட இந்து இயக்கங்களை அரவணைத்திருக்கிறேன். தொடர்ந்து அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவேன்” எனவும் ஜக்டீப் தெரிவித்தார்.

2007-இல் நடைபெற்ற ஹிண்ட்ராப் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இரண்டாவது துணை முதல்வர் பதவி என்பது இந்திய தமிழருக்கான பதவியான நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ஜக்டீப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இராமசாமியின் கூற்று இனவாதம் கொண்டது, சிறுமையானது. அவர் மேலும் இதுபோன்ற தேவையில்லாத விவகாரங்களை கிளறிக் கொண்டிருக்கக் கூடாது. உண்மையிலேயே 2-வது துணை முதல்வர் பதவி என்பது எனது தந்தையார் கர்ப்பால் சிங்கால் வடிவமைக்கப்பட்டது. இந்தியர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட பதவி இது. மாறாக தமிழர்களுக்காக மட்டும் நிர்ணயிக்கப்பட்ட பதவி அல்ல” என்றும் வலியுறுத்தினார்.

டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்டீப், பினாங்கு மாநில ஆட்சிக் குழுவில் மனிதவள மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.

தனக்கு முன் துணை முதல்வர் பதவியை வகித்த இராமசாமி, துணை முதல்வர் பதவிக்கு ஏற்படுத்திய தோற்றத்தை மாற்றியமைத்து, மறுசீரமைப்பு செய்து புதிய தோற்றம் கொடுக்கவிருப்பதாகவும் ஜக்டீப் குறிப்பிட்டார்.

அரசியலில் தான் இவ்வளவு தூரம் உயர்ந்திருப்பதை தனது தந்தையார் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்றும் ஜக்டீப் கூறினார்.

“எனது தந்தையார் எனக்கு ஒரே ஒரு அறிவுரையைத்தான் வழங்கினார். எந்தப் பதவியில் இருந்தாலும் மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதுதான் அது. இன்று நான் இருக்கும் இடத்தை அவர் பார்க்க நேர்ந்திருந்தால் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நான் அவரின் இழப்பை பெரிதும் உணர்கிறேன்” என்றும் ஜக்டீப் தன் தந்தை கர்ப்பால் சிங்கை சோகத்துடன் நினைவு கூர்ந்தார்.

கடந்த இரண்டு தவணைகளாக ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் ஆற்றிய சேவைகள், பெற்ற அனுபவம் – அதன் அடிப்படையிலேயே தான் துணை முதல்வராக நியமிக்கப்படதாக ஜக்டீப் மேலும் தெரிவித்தார்.

நடப்பு முதலமைச்சர் சௌ கோன் இயோவுக்கு அடுத்து நீண்ட காலம் ஆட்சிக் குழு உறுப்பினராக அனுபவம் கொண்டவராக ஜக்டீப் திகழ்கிறார்.