Home நாடு பினாங்கு : ஜக்டிப் சிங் டியோ துணை முதலமைச்சர் – சுந்தரராஜூ ஆட்சிக் குழு உறுப்பினர்

பினாங்கு : ஜக்டிப் சிங் டியோ துணை முதலமைச்சர் – சுந்தரராஜூ ஆட்சிக் குழு உறுப்பினர்

484
0
SHARE
Ad
ஜக்டீப் சிங் டியோ

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் முதலமைச்சர் சௌ கோன் இயோ தலைமையில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குப் பதவியேற்கவிருக்கின்றனர்.

துணை முதலமைச்சராக இராமசாமிக்குப் பதிலாக ஜசெக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் ஜக்டீப் சிங் டியோ பதவியேற்கிறார்.

ஆட்சிக் குழு உறுப்பினராக பிறை தொகுதியில் வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வீட்டு வசதித் துறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறை தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னர் ஒரு பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சுந்தர்ராஜூ. அதனால் அந்தத் துறையின் நுணுக்கங்களை அறிந்தவர்.

#TamilSchoolmychoice

முதன் முறையாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்னோ சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பினாங்கு ஆட்சிக் குழுவில் இணைகிறார்.

மற்றொரு துணை முதல்வராக பிகேஆர் கட்சியின் பத்து மாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமிட் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான்

அம்னோவின் பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னர் ஆரூடங்கள் வெளியாகின.

இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கில் வெற்றி பெற்றிருக்கின்றனர். ரீசல் மெரிக்கன் பெர்த்தாம் தொகுதியிலும், சுங்கை அச்சே சட்டமன்றத் தொகுதியில்  ரஷிடி ஜினோலும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரில் ஒருவர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார்.

100 விழுக்காடு வெற்றி பெற்ற ஜசெக

பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின் வெற்றிக்கும் துணை புரிந்திருக்கிறது.

மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 29 சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது தவணைக்கு சௌ கோன் இயோ முதலமைச்சராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.