கோத்தாபாரு : கிளந்தானில் மொத்தமுள்ள 45 தொகுதிகளில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்ற பாஸ் கட்சியின் சார்பில் மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நசாருடின் டாவுட் இன்று செவ்வாய்க்கிழமை அம்மாநிலத்தின் 9-வது மந்திரி பெசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
58 வயதான நசாருடின் கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகமட் முன்னிலையில், குபாங் கெரியானில் உள்ள அரண்மனையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
டத்தோ டாக்டர் முகமட் பாட்ஸ்லி ஹாசான் கிளந்தானின் புதிய துணை மந்திரி பெசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
2013 முதல் கிளந்தான் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இஸ்லாமிய மேம்பாடு தொடர்பான துறைகளுக்கு நசாருடின் பொறுப்பேற்றிருந்தார்.
மெராந்தி சட்டமன்றத்தைக் கடந்த 7 தவணைகளாக 1995 முதல் தற்காத்து வருகிறார் நசாருடின். ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் சாஹ்ரி ஓமாரை 9,154 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார் நசாருடின்.
எகிப்தின் புகழ் பெற்ற அல் அசார் பல்கலைக் கழகத்தில் படித்தவர் நசாருடின்.
கிளந்தானின் புதிய துணை மந்திரி பெசாரான முகமட் பாட்ஸ்லி ஏற்கனவே ஆட்சிக் குழு உறுப்பினராகப் பணியாற்றியவர். தெமாங்கான் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 3 தவணைகளாக வெற்றி பெற்றவர் முகமட் பாட்ஸ்லி.
மலேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை பேராசிரியரான முகமட் பாட்ஸ்லி அங்கு சட்டத்துறையில் பணியாற்றினார்.
மேலும் 9 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கிய வேளையில் கிளந்தான் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப், துணை மந்திரி பெசார் மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.