ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின் வெற்றிக்கும் துணை புரிந்திருக்கிறது.
மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 29 சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி கைப்பற்றியதைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இரண்டாவது தவணைக்கு சௌ கோன் இயோ முதலமைச்சராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
பல்வேறு தரப்புகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பினாங்கு மாநிலத்துக்கான ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு பதவியேற்பர் என சௌ கோன் இயோ தெரிவித்தார்.
இந்தியர் சார்பிலான இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவருக்கு பதிலாக துணை முதல்வராக நியமிக்கப்படவிருக்கும் இந்திய சட்டமன்ற வேட்பாளர் யார் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பு நாடு முழுமையிலும் ஏற்பட்டுள்ளது.
ஜசெக சார்பில் பிறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என பினாங்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.