Home Photo News பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா : அன்வார் வருகை

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா : அன்வார் வருகை

478
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள துன் சம்பந்தன் கட்டடத் தொகுதியில் உள்ள அங்காடி உணவகங்களைத் திறந்து வைக்க வருகை தந்தார். முன்பு பைன்ஸ் என அழைக்கப்பட்ட இந்த அங்காடிக் கடைகள் தற்போது டி-மேடான் மடானி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக இருந்த காலகட்டத்தில் பிரிக்பீல்ட் வட்டாரத்தின் லிட்டல் இந்தியா பகுதி அவரின் முயற்சியில் பெருமளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதிய தோற்றம் கண்டது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில்  வணிகங்களும் பெருகின. வணிகர்களுக்கும் அந்தப் பகுதிக்கு வருகை பயனீட்டாளர்களுக்கும் கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டன. சுற்றுப் பயணிகளின் வருகையும் இங்கு அதிகரித்து வருகிறது.

2008 முதல் 2013 வரை டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கூட்டரசுப் பிரதேச மற்றும் நகர்புற நல்வாழ்வு துணையமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் பிரிக்பீல்ட்ஸின் புதிய தோற்றம் மிக துரிதமாக உருவானது.

#TamilSchoolmychoice

இன்று அன்வார் வருகையை முன்னிட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் அன்வாருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையில் “இன்றைக்கும் அந்த நினைவு பசுமையாக உள்ளது. இந்தியர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரிக்பீல்ட்ஸ்-இல் வாழும் மக்கள், அங்குள்ள வர்த்தகர்கள், அந்த சூழல் அனைத்துமே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று” என்று தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்

தலைநகரில் இந்தியர் கலாச்சாரம், கலைகள் மற்றும் இந்திய வணிகங்களுக்கான மையமாக பிரிக்ஃபீல்ட்ஸ் திகழ்ந்து  வருகிறது.

அன்வார் டி-மேடான் மடானி அங்காடிக் கடைத் தொகுதியை திறந்து வைத்த பின்னர், அந்த வட்டார கடைத் தெருவில் வலம் வந்து அங்கு அமைந்து காரா சாரா உணவகத்தில் டத்தோஸ்ரீ சரவணனுடன் உணவருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் வி.சிவகுமார், தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், இந்திய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும், 3 முக்கியத் தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

முடிவெட்டும் தொழில், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவையே அந்த மூன்று தொழில் துறைகளாகும்.

அன்வார் வருகையின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: