Home நாடு பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர் – புதிய அறிவிப்புகள் என்ன?

பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர் – புதிய அறிவிப்புகள் என்ன?

388
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு இந்திய சமூகத்தில் பரவலாக வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

சனீஸ்வர நேதாஜி ராயர் என்னும் வித்தியாசமான பெயர் கொண்டவர் ராயர். நாடாளுமன்றத்திற்கு சென்றாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தயக்கமில்லாமல் நெற்றி நிறைய விபூதி, குங்குமத்துடன் காட்சியளிப்பவர் ராயர்.

அதன் காரணமாக இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.

#TamilSchoolmychoice

ராயரின் நியமனம் ஆகஸ்ட் 30 முதல் அமலுக்கு வந்தது-  ஜூலை 31, 2024 அன்று நிறைவடைகிறது என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

ராயர் 2008 முதல் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்களில் ஒருவராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

“ராயர் ஒட்டுமொத்த வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்துவார் என்று நம்புகிறோம்” என்று சௌ கோன் இயோவ் சோவ் இந்த நியமனம் தொடர்பான தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

ராயர் நியமிக்கப் போகும் இந்து அறப்பணி வாரியத்தின் புதிய ஆணையர்கள் யார்? அறப்பணி வாரியத்தின் புதிய திட்டங்கள் என எதை அறிவிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பினாங்கு இந்துக்களிடையே எழுந்துள்ளது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் என்பது 1906 ஆம் ஆண்டு இந்து அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பினாங்கில் உள்ள இந்து சமூகத்தின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிலம், கட்டிடங்கள், வீடுகள், புதைகுழிகள், கோயில்கள் மற்றும் நிதி  ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

இதற்கு முன்பு பிறை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமான பி ராமசாமி இந்து அறப்பணி வாரியத் தலைவராக பணியாற்றி வந்தார்.