Home நாடு மகாதீருக்கு ரமணன் கண்டனம் – “தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள்”

மகாதீருக்கு ரமணன் கண்டனம் – “தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள்”

444
0
SHARE
Ad
டத்தோ ஆர்.ரமணன்

கோலாலம்பூர்: பிகேஆர் தகவல் பிரிவின் துணைத் தலைவர்  டத்தோ ஆர். ரமணன், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இனம், மதம் அரச குடும்பம் – என 3 ஆர் என்று குறிப்பிடப்படும் அம்சங்கள் தொடர்பில் தொடர்ந்து முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வரும் மகாதீரை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சாடினார்.

இன்று விடுத்த அறிக்கையில், அம்னோவுடன் இணைந்து மசீச, மஇகா ஆகிய மற்ற இன அரசியல்அமைப்புகளும் இணைந்து அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் கையொப்பமிட்டதால்தான் நம்மால் சுதந்திரம் பெற முடிந்தது என்பதையும் மகாதீர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“தயவுசெய்து அவற்றைப் படிக்கவும். சரவாக் மற்றும் சபா உட்பட மலேசியாவைக் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டன” என்று மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தலைவருமான ரமணன் மேலும் தெரிவித்தார்.

மலேசியா ஒரு நாடாக ஒற்றுமையாக இருப்பதையும் மக்கள் ஒன்றுபட்டு இருப்பதையும் மகாதீர் பொறுப்புணர்வுடன் உறுதி செய்ய வேண்டும் என்றும் ரமணன் கேட்டுக் கொண்டார்.

மகாதீர் கூற்றுப்படி பார்த்தால் டொமினிக் லாவ் தலைமையில் இயங்கும் கெராக்கான் கூட ஒரு ‘பார்ட்டி பெண்டாத்தாங்’ (வந்தேறிகள் கட்சி) என்று கருதப்பட வேண்டும் என்றும் ரமணன் சுட்டிக் காட்டினார்.

“அப்படியானால், மகாதீர் ஆதரிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் கெராக்கான் ஏன் இணைந்திருக்கிறது?” என்றும் ரமணன் கேள்வி எழுப்பினார்.

“பார்ட்டி பெண்டாத்தாங்’ என்று அழைக்கப்படுபவர்களின் ஆதரவு இல்லாமல் நாம் சுதந்திரத்தையோ அல்லது பிற்காலத்தில் மலேசியா தோற்றுவிக்கப்பட்டதையோ அடைந்திருக்க மாட்டோம். டாக்டர் மகாதீருக்கு ஏற்கனவே 98 வயதாகிவிட்டதால் அவருக்கு மறதி ஏற்பட்டதற்காக நான் மன்னிக்கிறேன். மகாதீர் தனது தந்தை இந்தியாவின் கேரளாவில் இருந்து வந்தவர் என்பதை இன்னும் நினைவில் வைத்திருப்பதாக நம்புகிறேன. அவருடைய தர்க்கத்தின்படி அவரும் ஒரு பெண்டாத்தாங் என்றுதான் அர்த்தம்” என ரமணன் குறிப்பிட்டார்.

மலேசியா ஏற்கனவே 66 வருடங்களாக சுதந்திரம் பெற்றுள்ள நிலையில் இந்த ‘பெண்டாத்தாங்’ பேச்சுக்களை விவாதிப்பதை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் ரமணன் வலியுறுத்தினார்.