கோலாலம்பூர் : தமிழ் நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வெளிநாடுகளிலும் எழுந்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் பேசிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உதயநிதி வெளியிட்ட கருத்துக்கு எதிராக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதன் தொடர்பில் ஆட்சேப மனு வழங்குவதற்காக கண்டன அமைதிப் பேரணி ஒன்று இந்தியத் தூதரகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 29-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நீண்ட காலமாக, மஇகாவுக்கும், திமுகவுக்கும் இடையில் நல்லுறவுகள் நிலவி வந்திருக்கிறது. மஇகா தலைவர்கள் சென்னை செல்லும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுவது உண்டு.
அதேபோல, முன்பு தமிழ் நாடு முதல்வர் கோலாலம்பூர் வந்திருந்தபோது அவருக்கு மஇகா தலைவர்கள் சிறப்பான வரவேற்பை நல்கினர்.
ஆனால் இப்போது உதயநிதியின் கருத்தால் இந்தியாவில் மட்டுமின்றி, மலேசியாவிலும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
ஏற்கனவே, மலேசிய இந்து அமைப்புகள் ஒன்றுகூடி உதயநிதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இந்தியத் தூதரகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.