Home நாடு சீனப் பள்ளியில் 52% மலாய் மாணவர்கள்- 7% இந்திய மாணவர்கள்

சீனப் பள்ளியில் 52% மலாய் மாணவர்கள்- 7% இந்திய மாணவர்கள்

540
0
SHARE
Ad

செமினி : நாட்டில் இயங்கும் சீன ஆரம்பப் பள்ளிகளில் நிறைய அளவில் மலாய், இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஒரு சீனப் பள்ளியில் 52% மாணவர்கள் மலாய் மாணவர்கள் – 7% மாணவர்கள் இந்தியர்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட் வட்டாரத்தில், பெரெனாங்கில் உள்ள தோன் ஃபா (SJKC Ton Fah- Beranang) என்ற பள்ளிதான் அந்த ஆச்சரியத்துக்குரிய பள்ளி.

தோன் ஃபா இந்த பள்ளி, நகர்ப் புறமான செமினி வட்டாரத்திற்கு இடம் மாறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த புதிய பள்ளியை துணை கல்வி அமைச்சர் லிம் ஹூய் யிங் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சி குறித்த செய்தியையும் படங்களையும் தன் முகநூல் பக்கத்திலும் அவர் பதிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொடர்பு இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங்கும், சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் இங் சீ ஹான்னும் கலந்து கொண்டனர்.

பழமையான பள்ளி

மிக நீண்ட வரலாறு கொண்டது தோன் ஃபா சீனப் பள்ளி. 1910-ஆம் ஆண்டில் பெரெனாங்கில் உள்ள கம்போங் சுங்கை மாச்சாங் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.

இந்த பள்ளியின் இடமாற்றம் குறித்து கருத்துரைத்த துணை அமைச்சர் லிம், 2017 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி இடம் மாறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் புதிய பள்ளியை கட்டுவதற்கான அனுமதி 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோவிட் 19, ஆட்சி மாற்றங்கள் ஆகியவை காரணமாக, 6 ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் நான்காம் தேதி இந்தப் பள்ளியின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்தன.

இதுபோன்ற குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட சீனப் பள்ளிகளை இடம் மாற்றுவது குறித்து கருத்துரைத்த துணை அமைச்சர் லிம், பள்ளிகள் இடம் மாற்றுவதில் புதிய வீடமைப்பு மேம்பாட்டு பகுதிகளில் தேவைகள் அதிகம் இருந்தாலும் அது குறித்து பெற்றோர்களின் அனுமதியும் புதிய கட்டிடத்திற்கான இடம் மாற்றம் தொடர்பான புதிய கட்டட நிர்மாணிப்பு செலவுகள் போன்ற பிரச்சனைகளும் இருப்பதாக தெரிவித்தார்.

நல்ல உள்ளம் படைத்த பணக்காரர்கள் குறிப்பாக நில மேம்பாட்டாளர்கள் பள்ளிகளுக்கான நிலத்தை வழங்க வேண்டும் எனவும் லிம் வேண்டுகோள் விடுத்தார்.

52 விழுக்காட்டு மலாய் மாணவர்கள்

தற்போது 253 மாணவர்களைக் கொண்டுள்ள இந்த சீனப்பள்ளியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் மாணவர்கள். கடந்த காலத்தில் சீன மாணவர்களே இந்த பள்ளியில் அதிகம் இருந்தனர். இருப்பினும் சீனக் குடும்பங்கள் நகர்ப்புறங்களுக்கு குடியேறி சென்றதால் சீன மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டது. மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது இக்கோ மேஜெஸ்டிக் என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பள்ளி, பழைய பள்ளியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனினும் இந்தப் பள்ளியில் முன்பிருந்த மாணவர்களை விட கூடுதலாக 14 மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நவம்பர் 2023 கணக்கெடுப்பின்படி, இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 7.51 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பதும் 5.14 விழுக்காட்டினர் மற்ற இனத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீன மாணவர்கள் 34.78 விழுக்காட்டினர் மட்டுமே! ஆனால் மலாய் மாணவர்கள் 52.57 விழுக்காட்டினர் இருக்கின்றனர்.

எதிர்வரும் புதிய கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய பள்ளி 7 வகுப்பறைகளுடன் இயங்கி வந்த நிலையில் புதிய பள்ளியில் 24 வகுப்பறைகள் – அதில் 13 வகுப்பறைகள் இலக்கவியல் வசதிகளுடனும் – 8 வகுப்பறைகள் நவீன விவேக தொலைக்காட்சிப் பெட்டிகளுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.