கோலாலம்பூர், ஏப்ரல் 26- ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி பிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் மகள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள், நேற்று சில மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு கிள்ளானிலுள்ள அவரது வீட்டில் 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அச்சமயத்தில் சேவியர் ஜெயக்குமார் மற்றும் தேர்தல் முகவரான அவரது மகள் சங்கீதா ஜெயக்குமார் ஆகியோர் பிகேஆர் சார்பான கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகனம் ஒன்றில் இருந்து இறங்கி வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் வாயில் கதவின் மீது ஏறத்தொடங்கியுள்ளனர். இதை பார்த்த (பெயர் சொல்ல விருப்பாத) அண்டை வீட்டுக்காரர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
ஆனால் அக்கும்பலைச் சேர்ந்த இருவர், சத்தம் போட்டால் அவர்கள் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளை வீசப் போவதாக மிரட்டியுள்ளனர்.
அதன் பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சங்கீதா ஜெயக்குமாரின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள், வெளியில் பொதுமக்கள் கூடத்தொடங்கியதால், அங்கு நின்றிருந்த மற்றொரு காரின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வீட்டில், சங்கீதா ஜெயக்குமாரின் கணவர் டாக்டர் அர்னில் ஸ்ரீமான், அவர்களது 1 வயது குழந்தை மற்றும் பணிப்பெண் ஆகியோர் இருந்துள்ளனர்.
அவர்களது அராஜகத்தை தட்டிக்கேட்ட டாக்டர் அர்னில் ஸ்ரீமானை கெட்ட வார்த்தைகளால் திட்டிய கும்பல், பாராங் கத்தியைக் காட்டி அவரை மிரட்டியுள்ளது. பிறகு சிறிது நேரத்தில் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரசியல் நோக்கமா?
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சேவியர் ஜெயக்குமார், இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. தன்னைப் போல் தனது மகளும் அரசியலில் ஈடுபட்டிருப்பதால், தனக்கு வேண்டாதவர்கள் தான் இது போன்ற சம்பவங்களை நிகழ்வத்துவதாக சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படிப்பட்ட சமூக விரோத செயல்களை செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்தை இரு தரப்பினரும் ஊக்குவிக்கக் கூடாது என்றும், இந்நிலை தொடருமானால் நம்மால் ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்க முடியாது என்றும் சேவியர் தெரிவித்தார்.
அதோடு, “இது போன்ற சம்பவங்களை நிகழ்த்தி என்னை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் பயந்து என் நிலையிலிருந்து நான் என்றும் பின்வாங்கப்போவதில்லை” என்று தீர்க்கமான குரலில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சேவியர் ஜெயக்குமார், தனக்கு எதிராகக் களமிறங்கும் ம.இ.கா வை சேர்ந்த டி.மோகன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான மனித உரிமைக் கட்சியைச் சேர்ந்த பி.உதயகுமார், கேஎஸ் கொட்டப்பன் சுப்பையா, ஹானாபியா ஹுசைன் ஆகியோருடன் சேர்த்து ஐந்துமுனைப் போட்டியை சந்திக்கிறார்.