Home இந்தியா ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டி – வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார்?

ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டி – வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார்?

363
0
SHARE
Ad

புதுடில்லி : நீண்ட காலமாக நேரு – இந்திரா காந்தி குடும்பத்தினர் தற்காத்து வந்திருக்கும் தொகுதி உத்தரப் பிரதேசத்திலுள்ள ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதி. கடந்த சில தவணைகளாக சோனியா காந்தி இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருக்கிறார். கடந்த 2019 பொதுத் தேர்தலிலும் சோனியாவே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ரேபரேலி தொகுதிக்கான தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் இன்று வெள்ளிக்கிழமை (மே 3) என்ற நிலையில் ராகுல் இங்கு போட்டியிடுவாரா என்ற ஆரூடங்கள் பரபரப்பாக நிலவி வந்தன.

ஒருவழியாக ரேபரேலியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் ராகுல் இந்தியா முழுமைக்குமான பரபரப்பு செய்தியாகியிருக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார் தினேஷ் பிரதாப் சிங். கடந்த பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டவரும் இவர்தான்.

#TamilSchoolmychoice

சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடமாட்டார் என்பது உறுதியானது. அவருக்குப் பதிலாக ராகுல் போட்டியிடுவாரா அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற ஆரூடங்களும் எழுந்தன.

ஏற்கனவே, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். அந்தத் தொகுதிக்கான வாக்களிப்பு கடந்த கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்து முடிந்து விட்டது.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றால், அவர் 2 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர முடியாது. எனவே, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ராஜினாமா செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.