
ஜோகூர் பாரு : உலுதிராம் காவல் நிலையம் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 7 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வெளிநாட்டவர் யாருமில்லை என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) ரசாருடின் ஹூசேன் எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 62 வரையிலான வயது வரம்பு கொண்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் ஜெமாஆ இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் தந்தை முன்பு இந்த இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார் என்ற அடிப்படையில்தான் முதலில் காவல் துறை அத்தகைய அறிவிப்பை வெளியிட்டது என்றும் ரசாருடின் கூறினார்.
தாக்குதல் நடத்திய நபர் தன் சொந்த காரணங்களுக்காக அந்தத் தாக்குதலை நடத்தினார் என்பதை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தடுப்புக் காவலில் இருப்பவர்களில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் குடும்பத்தினர் ஐவரும் அடங்குவர். வெள்ளிக்கிழமை (மே 17) அதிகாலை சந்தேக நபரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
உலுதிராம் காவல் நிலைய சம்பவம் நடந்தபோது அங்கிருந்த 21 மற்றும் 22 வயது கொண்ட 2 கல்லூரி மாணவர்களும் கைது செய்யப்பட்ட 7 பேர்களில் அடங்குவர்.
உலுதிராம் காவல் நிலையத் தாக்குதல்
ஜோகூர் மாநிலத்தின் உலுதிராம் வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது நபர் ஒருவர் மே 17-ஆம் தேதி அதிகாலையில் தீடீரென நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு அதிகாரி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த காவல் துறையினர் கான்ஸ்டபிள் அகமட் அஸ்ஸா என்றும் கான்ஸ்டபிள் முகமட் ஷாபிக் அகமட் சைட் என்றும் காவல் துறை அறிவித்திருக்கிறது.
தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைவசம் வைத்திருந்த பொருட்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, அவர் தாக்குதல் நடத்தும் நோக்கத்திலேயே உலுதிராம் காவல் நிலையம் வந்திருந்தார் என்றும் ரசாருடின் தெரிவித்திருந்தார்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இல்லத்தில் நடத்திய சோதனையின்போது அங்கு சுவர்களில் சில வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஐஜிபி கூறினார்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களைத் திருடும் நோக்கத்தைக் கொண்டிருந்தார் எனத் தாங்கள் கருதுவதாகவும் ஐஜிபி குறிப்பிட்டார்.
ஜோகூரில் உள்ள ஜெமாஆ இஸ்லாமியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதான புலனாய்வு விசாரணைகளைத் தாங்கள் முடுக்கி விட்டதாகவும் ஐஜிபி ரசாருடின் கூறினார். ஜோகூரில் சுமார் 20 உறுப்பினர்கள் அந்த இயக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.