டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளான நிலையில், இதுவரையில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரின் நிலைமையும், அந்த இலங்கூர்தியில் பயணம் செய்த மற்றவர்களின் நிலைமை குறித்தும் இதுவரை தெரியவில்லை. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹோசெய்ன் அமிர் அப்துல்லாஹியனும் அந்த இலங்கூர்தியில் பயணம் செய்தார்.
இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் வருமாறு:
*ரஷியா 50 பேர் கொண்ட மீட்புக் குழுவினரையும், ஒரு விமானத்தையும் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.
*துருக்கியும் இருளில் தேடும் தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட மீட்பு இலங்கூர்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
*இலங்கூர்தியில் இருந்த இரண்டு நபர்களுடன் மீட்புப் படையினர் தொடர்பு கொள்ள முடிந்தது என்ற காரணத்தால், விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
*20 மீட்புக் குழுக்களும், டுரோன் என்னும் ஆளில்லாமல் பறக்கும் சாதனங்களும் விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்துள்ளன.
அந்த இலங்கூர்தியில் ஈரானின் வட பகுதி நோக்கி ஈரானிய அதிபர் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.