புதுடில்லி : இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் வேளையில், சமூக ஊடகங்களில் சூடாக விவாதிக்கப்படும் இன்னொரு விவகாரம் – பாஜக 200+ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் போனால், பாஜக அந்தத் தோல்விக்கு மோடியைப் பொறுப்பாக்கி அவரை பிரதமர் பதவியிலிருந்து விலகச் சொல்லி நெருக்குதல் அளிக்குமா? அல்லது தொடர்ந்து மோடியின் பின்னால் வலுவுடன் பாஜகவினர் நிற்பார்களா? என்பதுதான்!
இவையெல்லாம் பாஜகவைப் பின்னால் இருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் எடுக்கப் போகும் முடிவுகள்! இந்த முடிவுகள் எப்படியிருக்கும் என்பதும் இன்றைய தேதியில் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது! ஆர்எஸ்எஸ் அணிக்கும், மோடி அணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இப்போதே வலுத்து வருவதாக ஊடக ஆரூடங்கள் வெளியிடப்படுகின்றன.
மோடிக்கு மாற்று பிரதமர் வேட்பாளர் –
என்றால் ஆதரிக்கக் கூடிய கட்சிகள்
இன்னொரு பரபரப்பான, சுவாரசியமான காட்சியும் அரங்கேறலாம். பாஜக 200+ தொகுதிகள் மட்டுமே பெற்றால், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தருகிறோம், ஆனால் பிரதமர் வேட்பாளரை மாற்றுங்கள் என மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை வைக்கலாம்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பாஜகவும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்படலாம். மோடியை இழப்பதற்கு அவர்கள் முன்வரலாம். மோடிக்கு பதிலாக மாற்று பிரதமர் வேட்பாளரை பாஜக முன் நிறுத்தலாம். எனவே, எப்படிப் பார்த்தாலும் மோடியை மையமாக வைத்தே இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது.
வெற்றி பெற்றாலும் அதற்குக் காரணம் மோடிதான் – மண்ணைக் கவ்வினாலும் காரணம் மோடிதான் – என்ற நிலைமைக்குள் பாஜக சிக்கியிருக்கிறது.
இன்னொன்றையும் நாம் மறவாமல் குறிப்பிட வேண்டும். இதுபோன்ற கணிப்புகளைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் (அல்லது கவலைப்பட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்) தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பிரத்தியேக நேர்காணல்களைத் தந்து கொண்டு – இலட்சக்கணக்கில் மக்கள் திரளும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் மோடி.
அவருக்கு மாற்றான பிரதமர் வேட்பாளர் – இந்தியா கூட்டணியிலும் தலையெடுக்கவில்லை – பாஜகவுக்குள்ளும் தைரியமாக முகம் காட்ட முன்வரவில்லை. ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் அதிகாரபூர்வமற்ற பிரதமர் வேட்பாளர் என்றாலும் அதை வாய்திறந்து கூற, திமுகவின் ஸ்டாலின் உட்பட ஒருவருக்கும் துணிச்சலில்லை. அதனால்தான், அப்படியே இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை வென்றாலும், அதன் பின்னர் அனைவரும் ஒன்று கூடி ராகுல் காந்தியைத்தான் பிரதமராக முன்மொழிவார்கள் என்ற நம்பிக்கையை யாராலும் முன்வைக்க முடியவில்லை.