தொடக்க, இடைநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டுணர்வு பெறச்செய்யவும் 1978இல் முனைவர் முரசுநெடுமாறன் அவர்கள் பல பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ‘மாணவர் பண்பாட்டு விழா’ ஏற்பாடு செய்து வெற்றிகரமாக 18 ஆண்டுகள் நடத்தினார்.
இவ்விழா மாணவர்களிடையே பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தி பண்பட்ட பல மாணவர்கள் உயர்நிலைக்குச் செல்ல வழிவகுத்தது. சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இவ்விழா சில ஆண்டுகள் நடைபெறாமல் போனது.
கடந்த ஆண்டு இவ்விழாவில் பண்பட்டவர்கள் ஒன்றிணைந்து, கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்துடன் கைகோர்த்து இவ்விழாவை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் இவ்விழாவை 19ஆம் விழாவாக வெற்றிகரமாக நடத்தினர். அவ்விழாவில் சுமார் 400க்கும் மேற்பட்ட தொடக்க இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு 20ஆம் மாணவர் பண்பாட்டு விழா கடந்த 10.8.2024ஆம் நாள் காலை மணி 8.30க்கு ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளியில் போட்டி நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கடந்தாண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு மாணவர்கள் அதிகமாகக் கலந்து கொண்டனர். தமிழ் மலாய்க்கட்டுரை, பேச்சு, பாடும் திறன், ஆத்திசூடி மனனம், திருக்குறள் மனனம், கவிதை வாசித்தல், பட்டிமன்றம், நடனம் என பல போட்டிகளில் 462 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். எதிர்வரும் 24.08.2024ஆம் நாள் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் தொடக்கப் பள்ளிகளின் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சுமார் 480 மாணவர்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர்.
மாணவர் பண்பாட்டு விழா எதிர்வரும் 8.9.2024ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் தெலுக் புலாய் நாவலர் மண்டபத்தில் பரிசளிப்புடன் வெற்றிபெற்ற மாணவர்களின் கலைப்படைப்புகளுடன் மிக சிறப்பாக நடத்த திட்டமிடப்பெற்றுள்ளது.
போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு கடந்த 09.6.2024 கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயிலரங்கம் ஒன்றினை ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தினர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
இவ்விழா மாணர்வர்களிடையே தமிழ் மொழியின் பால் பற்றினையும் பண்பாட்டு உணர்வினையும் மேலோங்கச் செய்து சிறந்த மாண்புமிக்க மாணவர்களை உருவாக்குவதே இவ்விழாவின் தலையாய நோக்கமாகும். இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுவார்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் பெரிதும் நம்புகிறார்கள். கிள்ளான் வட்டாரா கல்வி இலாக்காவின் அனுமதியுடன் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் ஏற்பாட்டிற்கு உதவிய ஆசிரியர்களுக்கும் கல்வி இலாக்க சான்றிதழ் வழங்கப் பெறும்.
இயல் இசை நாடக மன்றம் முன்னின்று நடத்தும் இவ்விழாவிற்கு இணை ஏற்பாட்டாளர்களாக கிள்ளான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் பேராதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இவ்விழா விரிவாக்கம் பெற்று மற்ற வட்டாரங்களுக்கும் கொண்டு சேர்த்து மாநில அளவில் நடைபெற எண்ணம் கொண்டுள்ளனர் ஏற்பாட்டுக் குழுவினர்.