Home Photo News மகாத்மா காந்தி சமாதியில் அன்வார் மரியாதை!

மகாத்மா காந்தி சமாதியில் அன்வார் மரியாதை!

141
0
SHARE
Ad
மகாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தும் அன்வார்…

புதுடில்லி- பிரதமர் பதவியேற்றவுடன் முதன்முறையாக இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) புதுடில்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு வருகை தந்து மரியாதை செலுத்தினார்.

நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு தன் குழுவினருடன் அன்வார் புதுடில்லி சென்றடைந்தார்.

புதுடில்லி விமான நிலையத்தில் அவரை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மேன்மைமிகு பி.என்.ரெட்டி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் குழுவினர் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

பிரதமருடனான குழுவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சுற்றுலாத் துறை அமைச்சர் தியோ கிங் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹாசான், அனைத்துலக வாணிப அமைச்சர் தெங்கு சாப்ருல், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், பிரதமரின் தலைமை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

புதுடில்லி விமான நிலையம் வந்தடைந்த அன்வாருக்கு பாரம்பரிய பஞ்சாபிய நடனங்களுடன் வரவேற்பு நல்கப்பட்டது.

“எனது குழுவினருடன் இறைவன் அருளால் இரண்டு நாட்கள் அதிகாரத்துவ இந்திய வருகை மேற்கொண்டு நான் நலமே புதுடில்லி வந்தடைந்தேன். இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவுகளை மேலும் வளர்க்கவும் விரிவாக்கவும் இந்த வருகை துணை புரியும். புதிய துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கவும் எனது வருகை உதவும் என்பதோடு அதற்கான கலந்துரையாடல்களிலும் எனது குழுவினர் ஈடுபடுவர். இந்திய முதலீட்டாளர்களை மலேசியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வரவேற்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அன்வார் இப்ராகிம் தனது வருகை குறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.