Home Photo News மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை – அன்வார், மோடி இணக்கம்!

மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை – அன்வார், மோடி இணக்கம்!

333
0
SHARE
Ad

புதுடில்லி-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்திய வருகையை முன்னிட்டு அவருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை – ஆய்வு மையம் – அமைக்கப்படும்.

நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) தனது குழுவினருடன் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு இன்று அதிபர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரையும் அவரது குழுவினரையும் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அன்வாருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

அந்த சந்திப்புகளுக்குப் பின்னர் அன்வாரும் மோடியும் இணைந்து தங்களின் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர். மோடி இந்தியில் விளக்கமளிக்க, அன்வார் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மோடி தன் உரையில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படுவதற்கான கோரிக்கையை எழுப்பினார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தபோது, மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படுவதை உறுதி செய்தனர்.

மேலும், துங்கு அப்தல் ரஹ்மான் பல்கலைக் கழகத்தில் ஆயுர்வேதம் என்னும் பாரம்பரிய இந்திய வைத்திய முறை குறித்து கல்வி பயில – ஆய்வுகள் மேற்கொள்ள – இருக்கை ஒன்று நிர்மாணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அன்வார்-மோடி பேச்சுவார்த்தையின் பலனாக எடுக்கப்பட்ட மற்ற முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

1. மலேசியாவுக்கு கூடுதலாக 200,000 மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை இந்திய ஏற்றுமதி செய்ய அனுமதி.

2. இந்தியா ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பியம் பெற மலேசியா ஆதரிக்கும்.

3.பிரிக்ஸ் என்னும் நாடுகளின் கூட்டமைப்பில் மலேசியா இணைத்துக் கொள்ளப்பட்ட இந்தியா ஆதரவளிக்கும்.

(இடமிருந்து – அன்வாரின் அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார், விக்னேஸ்வரன், தியோங் கிங் சிங், கோபிந்த் சிங் டியோ,தெங்கு சாப்ருல்)

4.இருநாடுகளுக்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் அந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை அந்த செயற்குழு சமர்ப்பிக்கும்.

5. செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐடெக் என்னும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 மலேசிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும்.