Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் முக்கிய ‘அரசியல் புள்ளி’ யார்?

ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் முக்கிய ‘அரசியல் புள்ளி’ யார்?

112
0
SHARE
Ad
அசாம் பாக்கி

புத்ரா ஜெயா: பிரத்தியேகமான, பாதுகாப்பான இல்லங்களில் மில்லியன் கணக்கான பணத்தை ஒரு பிரபல அரசியல்வாதி வைத்திருந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் யார் என்ற பல்வேறு ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன.

அந்தக் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளது அமானா கட்சி.

மணல் அகழ்வு சலுகைக்கான விசாரணையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் அடையாளத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி இரகசியமாக வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சிலாங்கூர் அமானா, குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

“குற்றவாளி முக்கியமான நபராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று நம்புகிறோம்,” என்று அமானா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நல்ல மற்றும் நெறிமுறை ஆளுகையை கடைப்பிடிக்கும் மாநிலமாக, இந்த தவறுகளை சிலாங்கூர் சகித்துக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

“எனவே, ஊழல் தடுப்பு ஆணையம், தொடர்ந்து விசாரணை செய்து, சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து நல்லாட்சியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் அமானா வலியுறுத்துகிறது,” என்று அப்பாஸ் அஸ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.

மூத்த அரசியல்வாதியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு பாதுகாப்பு அறைகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் சோதனையிடப்பட்டதாக அசாம் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது. இந்த பாதுகாப்பு அறைகளின் எண்ணிக்கை  மூன்றாக உயர்ந்துள்ளது.

வழக்குடன் தொடர்புடைய மேலும் பல பாதுகாப்பு அறைகளில் விசாரணையாளர்கள் சோதனையிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும்தலைமை ஆணையர் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து “கோடிக்கணக்கான” பணம் கைப்பற்றப்பட்டதாக மலேசியாகினி தெரிவித்தது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் அந்த அரசியல்வாதி சிங்கப்பூரில் முதலீடுகளை செய்துள்ளதாகவும் ஆணையம் கண்டறிந்துள்ளதாக அசாம் கூறினார்.

அந்த அரசியல்வாதி அரசாங்கத்தைச் சேர்ந்தவரா அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரா என்று கேட்கப்பட்டபோது, அவர், “அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி… சரியான நேரம் வரும்போது உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் அசாம் பாக்கி.

பொருத்தமான நேரத்தில் அந்த அரசியல்வாதி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

இதுவரை, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 15 நபர்களிடமிருந்து ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009 மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (Amla) 2021 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.