Home நாடு வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்திற்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட்டா? தலைவர்கள் கேள்வி!

வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்திற்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட்டா? தலைவர்கள் கேள்வி!

169
0
SHARE
Ad
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அன்வார் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது…

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பித்த 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து பல ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ள அதே வேளையில் சில குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்திய சமூகத்தில் பரவலான அதிருப்திகள் நிலவுகின்றன. வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்தியர்களுக்கான அரசாங்க அமைப்பான மித்ராவுக்கு எப்போதும்போல் மீண்டும் 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மித்ராவுக்கு 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், அதே 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் மட்டுமே இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) கோலாலம்பூரில் நடைபெற்ற முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்ற டத்தோஸ்ரீ எம்.சரவணன் பெரும் எதிர்பார்ப்புடன் அன்வார் இப்ராகிமிற்கு வாக்களித்த இந்திய சமூகத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதற்கு ஏமாற்றம் அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான ஜசெகவைச் சேர்ந்த கணபதி ராவ் வரவு செலவுத் திட்டம் திருப்தியளிக்கவில்லை என ஏமாற்றம் தெரிவித்தார். தமிழ்ப் பள்ளிகளுக்கென பிரத்தியேக நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்ப் பள்ளிகளுக்கு கடந்த காலத்தில் எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்கள் வழங்கப்படவில்லை என்றும் கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.