ஏப்ரல் 29 – சரவாக் மாநிலத்தின் கூச்சிங் நகரில் இந்த பதாகையைப் பார்த்த பொதுமக்கள் நிச்சயம் ஒரு கணம் யார் இவர்? எந்த தொகுதியின் வேட்பாளர் என ஒரு கணம் யோசித்திருப்பார்கள்.
ஆனால் தெரிந்தவர்களுக்குத் தெரியும் இவர்தான் ஒரு வெடிகுண்டுத் தாக்குதலால் உடல் சிதறி வெறும் எலும்புத் துண்டுகளுடன் சடலமாக கிடைத்த மங்கோலிய அழகி அல்தான்துன்யா.
ஜசெக சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்த இந்த பதாகையில் காணப்படும் காலஞ்சென்ற அல்தான்துன்யா அவர் மரணமடைந்த காலந்தொட்டு இன்று வரை மலேசிய அரசியலை கலக்கி வருகின்றார் என்பதோடு பல்வேறு யூகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணகர்த்தாவாகவும் விளங்கி வருகின்றார்.
ஏதோ ஒரு தொகுதி வேட்பாளர் போல் பல பிரச்சார மேடைகளில் அவர் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.
இப்போதோ, அவரது படம் தாங்கிய பதாகைகளே வைக்கப்பட்டுவிட்டன.
ஆனால், இவர் ஒரு வேட்பாளர் அல்ல எனக் காரணம் காட்டி இவர் தோன்றும் பதாகைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கூச்சிங் நகரின் தென் பகுதி மாவட்ட அலுவலக அதிகாரிகளும் அவற்றை அகற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமுலாக்க அதிகாரிகள் இந்த வித்தியாச பதாகையை அகற்றுகின்ற காணொளியை (வீடியோ) கீழ்க்காணும் இணையத் தள முகவரியை அழுத்துவதன் மூலம் காணலாம்.