
வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் வரலாற்றில் மர்மங்களும், நம்ப முடியாத ஆரூடங்களும் கலந்தவை அந்நாட்டின் 3 முக்கியத் தலைவர்களின் படுகொலைகள்.
1964-இல் சுட்டுக் கொல்லப்பட்டவர் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி. அவரின் இளைய சகோதரர் ராபர்ட் கென்னடி 1968-இல் அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்டார். பிரச்சார காலகட்டத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசியல் ஈடுபாடில்லாவிட்டாலும் சமூகங்களை சரிசமமாக நடத்தவேண்டும் என்றும், கறுப்பின மக்களின் நலன்களுக்காகவும் போராடியவர் மார்ட்டின் லூதர் கிங். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்போது மேற்குறிப்பிட்ட 3 தலைவர்களின் கொலைகள் தொடர்பான ரகசிய அரசாங்க ஆவணங்களை பகிரங்கப்படுத்த டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலைகள் தொடர்பில் பல ஆவணங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாமல், அரசாங்க ரகசியங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அடுத்தடுத்து பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, அமெரிக்காவில் மட்டுமின்றி, உலக நாடுகளிடத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் டிரம்ப்.
டிரம்ப் உத்தரவைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 3 தலைவர்களின் படுகொலைகள் தொடர்பான பல மர்மங்கள், இரகசியங்கள் வெளிவருமா என்பதைக் காண அமெரிக்கர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.