Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் களம் நேரடிப் பார்வை: லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்காக அம்பிகா!

தேர்தல் களம் நேரடிப் பார்வை: லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்காக அம்பிகா!

575
0
SHARE
Ad

Ambiga-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 30 – கடந்த ஞாயிறன்று, வழக்கமான விடுமுறை நாள்தானே – மத்தியான வேளையில் மக்கள் சோம்பல் முறித்துக் கிடப்பார்கள் என்று பார்த்தால், வழக்கத்திற்கு மாறாக, பந்தாய் பெர்மாய் அரசாங்க அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சுறுசுறுப்பாக அங்கு இருந்த தற்காலிக பந்தலில் திரண்டு வந்து நின்றிருந்தார்கள்.

#TamilSchoolmychoice

காரணம், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் அந்தப் பகுதிக்கு பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிடும் நூருல் இசா அன்வார் வருகை தந்ததுதான்.

வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரம் செய்யவும்  பிபிஆர் கெரிஞ்சி, பந்தாய் பெர்மாய் என்று அழைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு வருகை புரிந்த நூருலுக்கு அங்குள்ள மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

சாலைக்கும் வீடுகளுக்கும் இடையேயான சிறிய பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து பரப்புரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 300 பேருக்கு மேல் அந்த சிறிய இடத்திலும் சாலைகளிலும்,  கூடி நின்ற போதிலும் மேலும் பலர் தங்கள் அடுக்குமாடி வீடுகளிலிருந்தும், வீட்டு மாடிகளின் நடைபாதைகளில் இருந்தும் பேச்சாளர்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

அவ்வாறு ஆங்காங்கே நின்று பிரச்சாரங்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், அவ்வப்போது  எல்லோருடனும் சேர்ந்து உற்சாகம் கொடுப்பது போல் கைத்தட்டி ஆரவாரம் செய்ததைப் பார்த்தபோது, மக்கள் கூட்டணி வெற்றியை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாகவே தென்பட்டது.

அதுமட்டுமன்றி பக்கத்திலிருந்த சாலையைக் கடக்கும் வண்டியில் உள்ளவர்களும் சைகை மூலமும் வார்த்தைகளாலும் ‘பாக்காத்தான் போலே’ என சத்தமாக தெரிவித்துக் கடக்கும் போது அந்த உற்சாகம் பேசியவர்கள் உள்பட அனைவரையும் தொற்றிக்கொண்டது.

மிரட்டல்களுக்கு பயப்படாமல் வாக்களியுங்கள்-அம்பிகா

இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் தூய்மையான தேர்தல் பற்றியும், எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் வாக்குகள் ரகசியமானவை என்பதால், தைரியமாக வாக்களிக்க வேண்டுமென்றும் 100 சதவீத வாக்குகள் பதிவாகவேண்டியது அவசியம் என்றும் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பெர்சே 2.0 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இறுதிவரை இருந்து கையேடுகளை அங்குள்ளவர்களிடம் வினியோகித்தவண்ணம் இருந்தனர்.

“லிட்டில் இந்தியா பிரச்சினையை தீர்த்து வைத்தவரே நூருல்தான்”- பக்தவத்சலம்

லெம்பா பந்தாய் பிகேஆர் தலைவர் பக்தவத்சலம் (பக்தா) பேசுகையில் “லிட்டில் இந்தியா எனப்படும் பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் வண்டிகள் நிறுத்துமிடம் இல்லாததால் தங்களுடைய வணிகம் பாதிக்கப்பட்டு கடைகளை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அப்போது, நான் இதனை நூருல் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரும் உடனே அங்கு ஒரு அலுவலகம் அமைத்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு ஏற்பாடு செய்தார்” என்று கூறினார்.

மீண்டும் ஒரு முறை அவ்வழியே அரசு பேருந்து விட, அப்போதும் தாங்கள் நூருல் மூலம் அதனை நிறுத்தி, லிட்டில் இந்தியா வணிகர்களின் நலம் காத்ததாகவும் கூறினார்.

மேலும் உரையாற்றிய பக்தா, நூருல் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றும் அவரை ஜெயிக்கவைப்பதே நமது கடமை என்றும் தமிழ், மலாய் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடி பிரச்சாரம் செய்தார்.

வாக்குகளை திசை திருப்ப யார் எதைக்கொடுத்தாலும் தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அவர் ராஜா நோங்சிக் வந்தால், தலைவாழை இலை போட்டு உபசரியுங்கள், வேண்டுமானால் சம்மந்தம் வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், ஆனால் வாக்குகளை மட்டும் போட்டுவிடாதீர்கள். அது மட்டும் நூருல் இசாவுக்குப் போட்டுவிடுங்கள் என்று ஆக்ரோஷத்துடன் கூறினார்.

மேலும் பிகேஆரை ஆட்சிக்கு கொண்டு வந்து அன்வாரை பிரதமராக்குவது நமது கடமை என்றவர்,அன்வாரை மலேசியாவின் நெப்போலியன் என்றும், நூருல் வருங்காலப் பிரதமர் என்றும் வர்ணித்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் அவருடைய நகைச்சுவையான உரையை ரசித்ததோடு, அவ்வப்போது அவருடைய பேச்சுக்கு இடையில் ‘இனி காலி லா’ (இதுதான் தக்க தருணம்) என்று உரக்க முழக்கமிட்டு பிகேஆரின் வெற்றியை உறுதிசெய்யும் தங்களின் ஆதரவைப்  பதிவு செய்தனர்.

அடுத்து பேசியவர்கள் ம இகாவின் சாதனை, சிவப்பு அடையாள அட்டைகள், எம்.ஐ.இ.டி, டெலிகொம்ஸ் பங்குகள், காணாமல் போன தமிழ் பள்ளிக்கூட நிலம் என்று பட்டியலிட்டனர்.

-சா.விக்னேஸ்வரி