இஸ்லாமாபாத், மே 1- வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தடை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு அவசர நிலையின் போது 59 நீதிபதிகளை பணிநீக்கம் செய்தது தொடர்பான வழக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் மீது தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாக்கல் செய்த 4 வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை எதிர் த்து பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், ‘‘முஷாரப் 2 முறை அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார். நீதிபதிகளையும் காவலில் வைத்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, முஷாரப் மீதான பெனாசிர் புட்டோ கொலை வழக்கில், அவரது நீதிமன்ற காவலை 15 நாட்களுக்கு நீட்டித்து தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடக்கும் மே 11ம் தேதியும், அதன்பின்னர் 3 நாட்களும் கூட அவர் தற்போதுள்ள வீட்டுச் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.