Home நாடு “செகாமாட்டில் சுப்ராவைத் தோற்கடியுங்கள்” – வங்கி ஊழியர் சங்கம் செகாமாட்டில் ஆர்ப்பாட்டம் – பிரச்சாரம்!

“செகாமாட்டில் சுப்ராவைத் தோற்கடியுங்கள்” – வங்கி ஊழியர் சங்கம் செகாமாட்டில் ஆர்ப்பாட்டம் – பிரச்சாரம்!

662
0
SHARE
Ad

Subra-Dr-Feature---1செகாமாட், மே 2இதுவரை இருந்த மனித வள அமைச்சர்களிலேயே மிக மோசமான அமைச்சர் என செகாமாட்டில் போட்டியிடும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய வங்கி ஊழியர் சங்கம், முன்பே அறிவித்தபடி சுமார் 200க்கும் மேற்பட்ட சங்க ஊழியர்களுடன் செகாமாட்டில் டாக்டர் சுப்ரமணியத்திற்கு எதிராகப் போராட்டத்தில் நேற்று இறங்கியது.

#TamilSchoolmychoice

“சுப்ராவை செகாமாட்டில் தோற்கடியுங்கள்” என்ற கோஷத்துடன் செகாமாட்டில் வங்கிகள் அதிகமாக உள்ள கடைத் தெருவில் போராட்டம் நடத்திய வங்கி ஊழியர்களுக்கு சுற்றியிருந்த பொதுமக்களும், கடந்து சென்ற கார்களும் ஒலியெழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

சிவப்பு வண்ண மேல்சட்டை அணிந்து திரண்ட வங்கி ஊழியர்கள் தங்களோடு கொம்பாங், உறுமி மேளம், ஆப்பிரிக்க இசைக் கருவிகள்  போன்ற பாரம்பரிய வாத்தியக் கருவிகளை எடுத்துவந்து சத்தமாக ஒலியெழுப்பினர்.

தேசிய முன்னணியினரும் சுப்ராவுக்கு ஆதரவாக திரண்டனர்

வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தை முன்கூட்டியே ஊகித்துக்கொண்ட தேசிய முன்னணி ஆதரவாளர்களில் ஒரு குழுவினரும் அதே பகுதியில் திரண்டு டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

“எங்களுக்கு சுப்ரா வேண்டும் – நாங்கள் தேசிய முன்னணியை விரும்புகின்றோம் என்ற சுலோகங்கள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் நேர் எதிராக முழக்கமிட்டார்கள்.

ஆனாலும், திருவிழா போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திய வங்கி ஊழியர்கள், தாங்கள் முன்னேற்பாடாக கொண்டு வந்த அதிக ஒலியெழுப்பும் கருவிகளின் துணைகொண்டு தேசிய முன்னணியினரின் கோஷங்களை அப்படியே அமுக்கி விட்டனர்.

“சுப்ராவை அகற்றுங்கள்” என்ற சுலோகத்தையும் கோஷத்தையும் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் வங்கி ஊழியர்கள் சுப்ரா செகாமாட்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என முழக்கமிட்டனர்.

நாங்கள் அரசியல் விளையாடவில்லை

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தேசிய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தான் எங் ஹோங் “நாங்கள் அரசியல் விளையாடுகிறோம் என மனிதவள அமைச்சர் அமைச்சர் கூறியுள்ளதை நாங்கள் மறுக்கின்றோம். நாங்கள் அரசியல் நடத்துவதாக இருந்தால் நாடு முழுவதும் தேசிய முன்னணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்போம். ஆனால் வங்கி ஊழியர்களை அமைச்சர் சுப்ரா நசுக்குகின்றார் என்ற காரணத்திற்காகவே நாங்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றோம்” என்று கூறினார்.

மலாயன் பேங்க் (மே பேங்க்) வங்கி ஊழியர் சங்கங்களின் இணைப்பு விவகாரத்தில் டாக்டர் சுப்ரா நடந்து கொண்டவிதம் முறையற்றது என்றும் குற்றம் சாட்டிய தான் எங், சுப்ரா மீது மனிதவள அமைச்சர் என்ற முறையில் இன்னும் நீண்ட குற்றப் பட்டியல் இருக்கின்றது என்றும் மேலும் பல விவகாரங்களில் அவர் ஊழியர்களின் நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றார் என்றும் கூறினார்.

உதாரணமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வயது வரம்பை 60ஆக உயர்த்தும் உத்தரவை, நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு மாறாக அமைச்சர் சுப்ரா ஜூலை 1ஆம் தேதி 2013வரை ஒத்தி வைத்தார். அவரது இந்த தாமதத்தினால் நாடு முழுமையிலும் உள்ள சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும் தான் எங் குற்றம் சாட்டினார்.

வங்கி ஊழியர் சங்கங்களின் உறுப்பினர்களில் சுமார் 150 முதல் 200 பேர் வரை செகாமாட்டில் தொடர்ந்து பொதுத் தேர்தல் வரை தங்கியிருந்து, செகாமாட் வாக்காளர்கள் ஏன் சுப்ராவை மீண்டும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை செகாமாட் வட்டார வாக்காளர்களிடையே பிரச்சாரம் செய்வார்கள் என்றும் சுப்ரா கடந்த காலத்தில் அமைச்சராக இருந்து செய்யத் தவறியதை சுட்டிக் காட்டுவார்கள் என்றும் நியூப் எனப்படும் அந்த தேசிய வங்கி ஊழியர்களின் சங்கத் தலைவர் கூறினார்.

வங்கி ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்போம் – சுவா ஜூய் மெங் உறுதி

இதற்கிடையில் செகாமாட் பிகேஆர் வேட்பாளர் சுவா ஜூய் மெங்கும். பக்கத்து தொகுதியான செகிஜாங் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் ஜூலைலே ஜெமாடி மற்றும் மக்கள் கூட்டணியின் சட்டமன்ற வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் வங்கி ஊழியர்களை சந்தித்து தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.

புதிய அரசாங்கம் அமைந்தால் வங்கி ஊழியர்களின் பிரச்சனைகளைக் கவனிப்போம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் செகாமாட்டில் போட்டியிடும் சுவா ஜூய் மெங் தங்களிடம் உறுதி மொழி வழங்கியிருப்பதாகவும் தான் எங் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

“எனவே, மற்ற கட்சிக்காரர்கள் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதை நாங்கள் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது” என்றும் தான் எங் கூறினார்.

எதிர்பாராத திருப்பமாக வங்கி ஊழியர்கள் சங்கம் இவ்வாறு சுப்ராவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து செகாமாட் தொகுதியில் நேரடியாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அவருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

-மலேசியாகினி